முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ராசிக் மொஹமட் ஃபைஸ் மற்றும் ஹமீத் லெப்பே மொஹட் ஆகியோரே இந்த புலனாய்வு விசாரணையில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தொடர் படுகொலைகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள அறிக்கையின்படி, வெவ்வேறு இடங்களில் டி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பல கொடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முருகன் கோவிலை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வவுணதீவு காவல்துறை அதிகார எல்லைக்குட்பட்ட கொத்தியாபொல பகுதியில் வசித்துவந்த அழகதுரை தர்மலிங்கம் என்பவர், அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment