Sunday, May 31, 2026

முக்கிய மருத்துவமனைகளுக்கு புற்றுநோய் பரிசோதனைகளை துரிதப்படுத்த 5 புதிய மம்மோகிராபி இயந்திரங்கள்

 

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக 5 நவீன மம்மோகிராபி (Mammography) பரிசோதனை இயந்திரங்களை முக்கிய அரச மருத்துவமனைகளுக்கு அறிமுகப்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.

மொத்தமாக 765 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நவீன மருத்துவ உபகரணங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனை , காலி கராப்பிட்டிய தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை , அனுராதபுரம் போதனா மருத்துவமனை மற்றும் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவனை ஆகியவற்றுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு இயந்திரத்தின் பெறுமதி 153 மில்லியன் ரூபாவாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் கூடிய 'சுகாதாரத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்' (Health System Enhancement Project) ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோய் பாதிப்பாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோயை, ஆரம்ப கட்டத்திலேயே மிகவும் துல்லியமாகக் கண்டறிவதற்கும், அதற்கான தொடர் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த புதிய தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைகளின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு மம்மோகிராபி இயந்திரங்களை அங்கு நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள அரச மருத்துவமனைகளில் 16 மம்மோகிராபி இயந்திரங்கள் மாத்திரமே பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த புதிய சேர்க்கைகளுடன் அதன் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள முக்கிய போதனா மற்றும் பொது மருத்துவமனைகளில் தற்போது இச்சேவை வழங்கப்பட்டு வந்தாலும், இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுவதால் நோயாளர்கள் வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்த புதிய இயந்திரங்களின் வருகையினால் நோயாளர்களின் காத்திருப்பு நேரம் குறைவடைவதுடன், பொதுச் சுகாதாரத் துறையில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் புதிய ஒப்பந்தம் : ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன் டொலர் நிதி உதவி

 

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்கள் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கையெழுத்திடப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை உதவிகளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வழங்கவுள்ளது.

ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமதா (Akio Isomata) மற்றும் FAO அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் வருமாறு :

*கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்நிலைகளில் 200 மீன் கூடுகள் (Fish Cages) அமைக்கப்படவுள்ளன.

* மீன் வளர்ப்பிற்குத் தேவையான மிதக்கும் வலை அமைப்புகள் வழங்கப்படவுள்ளன.

* கிழக்கு மாகாணத்தின் இங்கிநியாகல மீன் இனப்பெருக்க மையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹார்மோன்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

* கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு நவீன மீன் வளர்ப்பு முறைகள் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

* முதலாவது மீன் வளர்ப்புச் சுற்றுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் இலவசமாக வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம், சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், நிலையான மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுவதாக கடற்றொழில் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிறுவனம் நாளை மக்கள் பயன்பாட்டிற்கு - சுகாதார அமைச்சர் தலைமையில் திறப்பு விழா

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிறுவனம் 99 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு, நாளை (01) மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

நாளைய தினம் காலை 10:00 மணிக்கு நரம்பியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தத் திறப்பு விழா நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், இதில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியும் கலந்துகொள்ளவுள்ளார்.

மூளை, தண்டுவடம், நரம்பு மண்டலம் மற்றும் தசைத் தொகுதி தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கான விசேட நரம்பியல் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நவீனமயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் இலங்கையின் நரம்பியல் சிகிச்சைச் சேவைகளின் தரம் மற்றும் செயல்திறன் கணிசமாக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 62 மற்றும் 63ஆம் இலக்க விடுதிகளை உள்ளடக்கிய, நரம்பியல் பிரிவின் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விடுதிகள் வளாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த வசதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதிகளைக் கொண்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 22 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளன.

இந்தத் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, இலங்கையின் நரம்பியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், நரம்பியல் நிறுவனத்தின் நிறுவனர் 'தேஷமான்ய வித்யா ஜோதி' கலாநிதி ஜே.பி. பீரிஸின் (Dr. J.B. Peiris) உருவப்படமும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இலங்கை இளம் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம்


சென்னையின் கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் ஏற்பட்ட தகராறு, வீதியில் கொடூர மோதலாக மாறியதில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தகவல்களின்படி, கோயம்பேட்டில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றில் சிலர் மது அருந்தியபடி நடனமாடிக் கொண்டிருந்தபோது, இரு தரப்பினருக்கிடையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, மதுபானசாலையின் பாதுகாப்பு பணியாளர்கள் (பவுன்சர்கள்) தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

எனினும், மதுபானசாலைக்கு வெளியே வந்த பின்னரும் இரு தரப்பினருக்கிடையேயான பதற்றம் தணியாமல், வீதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது சிற்றூர்தியை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வாகனத்தின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

 

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து கட்டணங்களில் இடைக்கால திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஆண்டுதோறும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் வழக்கமான பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்படி, வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்களை 5 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 32 ரூபா அல்லது 33 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து உரிமையாளர்கள் தற்போது ஒரு பயணத்திற்கு சுமார் 25 ரூபா நஷ்டத்திலேயே சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம் – சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி அநுர உறுதி

 

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் 'டிட்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தத் தற்காலிக நிவாரணங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி இலக்குகளை எட்டக்கூடியதாக இருந்தால் மட்டுமே 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தினூடாக மேலதிக உதவிகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான நாணய நிதியத்தின் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி, இதுவரை இலங்கைக்கு கிடைத்துள்ள மொத்த நாணய நிதிய உதவி 2.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

அண்மைய அனர்த்தங்களால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 இல் 5% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2026 இல் 3% ஆகக் குறையும் என நாணய நிதியம் கணித்துள்ளது.

இதேவேளை 'டிட்வா' சூறாவளியால் மட்டும் இலங்கைக்கு 3.4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கு மோதல்களால் மார்ச் மாத சுற்றுலா வருகை 20% வீழ்ச்சியடைந்துள்ளது.

எரிசக்தி செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.4% ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு எரிபொருள் விலைகள் 38% முதல் 46% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்காலிக பின்னடைவுகள் காணப்பட்டாலும், 2027 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% முதன்மை உபரி இலக்கை எட்டுவது உள்ளிட்ட கடுமையான நிதி மறுசீரமைப்புகளை இலங்கை தொடர வேண்டும் என நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

மின் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம் - 6 மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இறக்குமதி

 

இலங்கையின் முதலாவது வர்த்தக ரீதியிலான மின்கல எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மேலும் 6 மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 160 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள கட்டமைப்புகள் மஹவ, வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன.

இந்த ஒவ்வொரு கட்டமைப்பும் பகல் வேளையில் 40 மெகாவாட் வரையான மின்சாரத்தை சேமித்து வைக்கும் திறன் கொண்டவையாகும்.

இரவு வேளையில் மின்சாரத்திற்கான தேவை உச்சமடையும் சந்தர்ப்பங்களில் இந்த அமைப்புகள் மூலம் தலா 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும்.

இதன்படி, புதிய 6 கட்டமைப்புகள் மூலமும் மொத்தம் 60 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டமானது 40 பில்லியன் ரூபாவிற்கும் அதிக முதலீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை அதிகரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தவும், நுகர்வோருக்கு குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கவும் வழிவகுக்கும்.

தற்போது எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சுமார் 115 ரூபா செலவாகிறது. எனினும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தச் செலவை 30 ரூபாவாகக் குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் மூலமான மின் உற்பத்திக்காக மாதாந்தம் செலவிடப்படும் வெளிநாட்டு அந்நியச் செலாவணியில், சுமார் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும் என வலுசக்திஅமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பருத்தித்துறையில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: வான்படை உதவியுடன் 2ஆம் நாளாகவும் தீவிர தேடுதலை முன்னெடுக்கும் கடற்படை!

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயுள்ள 4 கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகள், தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் புத்திக்க சம்பத் சூரியன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இரண்டு படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன கடற்றொழிலாளர்களைக் கண்டறியும் நோக்கில், இலங்கை கடற்படையினரின் விசேட ரோந்துப் படகுகள் கடலில் தேடுதல்களை நடத்தி வரும் அதேவேளை, இலங்கை வான்படையின் உதவியும் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், காணாமல் போன கடற்றொழிலாளர்கள் அல்லது அவர்களது படகுகள் குறித்த எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலவும் மோசமான வானிலை மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் எல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அகிலன் கருத்துத் தெரிவிக்கையில்;

"விசேட அனுமதியைப் பெற்று, இந்திய கடல் எல்லைப் பகுதி வரை சென்று தீவிரமான தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இதுவரை சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை" என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

 


நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி சேவையில் ஈடுபடும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாயாக அதிகரிக்கும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனையை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த எரிபொருள் விலை திருத்தத்தில் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 12 ரூபாயாலும், இம்முறை 24 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் 36 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கடந்த முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோதும் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்த விரும்பாத காரணத்தால் கட்டண அதிகரிப்பை கோரவில்லை என்றும், ஆனால் தற்போதைய பாரிய விலை அதிகரிப்பிற்குக்கு பின்னர் பழைய கட்டணத்தின் கீழ் சேவையை தொடர்வது சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் செலவுகளுடன் சேர்த்து, முச்சக்கர வண்டிகளுக்கு தேவையான கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டிகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், முச்சக்கர வண்டித் தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும், பல சாரதிகள் தொழிலில் இருந்து விலகும் அபாயம் காணப்படுவதாகவும் ரோஹண பெரேரா எச்சரித்துள்ளார்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சிறு தொழில்முனைவோர்களின் சவால்களை போதியளவு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

 

டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைய சூழலில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணங்களை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை!

 

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், தனி ஒருவர், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று முதல் தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்குத் தேவையான பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் சூரியன் செய்திப் பிரிவுக்குக் குறிப்பிட்டார்.


புதிய சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹூங்கம கடலில் காணாமல்போன சிறுவர்களில் இருவர் உடலங்களாக மீட்பு

 

ஹம்பாந்தோட்டை ஹூங்கம - களமெட்டிய கடற்பரப்பில் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன மூன்று சிறுவர்களில் இருவரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடலில் நீராடச் சென்ற 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இருவரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல்போன மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள்தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் புதிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.


உலகளாவிய எரிசக்தி சந்தைத் தரவுகளின்படி, அமெரிக்காவின் தரக்குறியீட்டு மசகு எண்ணெய்யான WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.36 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.12 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதனிடையே, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.290 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை உலக எரிசக்தி சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

உலக சந்தை விலைகளின் இந்த மாற்றங்கள், எரிபொருள் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்று வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு

 


பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’ என அழைக்கப்படும் அரிய வகை முழு நிலவை இன்று ( 31) இரவு பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர விடுத்துள்ள அறிவிப்பில், இந்த விசேட நிகழ்வானது பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறையோ நிகழக்கூடிய ஒரு அரிய வானியல் நிகழ்வு என விவரித்துள்ளார்.

எனினும், 'நீல நிலவு' என்பது சந்திரன் நீல நிறமாக மாறுவதைக் குறிக்காது என்றும், ஒரே நாட்காட்டி மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவே இவ்வாறு 'நீல நிலவு' என அழைக்கப்படுவதாகவும் விஞ்ஞான பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு வானம் மேகமூட்டமின்றித் தெளிவாகக் காணப்படும் பட்சத்தில், நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இந்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் தெளிவாகப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

 

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Saturday, May 30, 2026

அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

 

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார்.

அவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அதிரடி முற்றுகை : பிரபல கசிப்பு வியாபாரி கைது

 


மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் பொசன் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட முக்கிய பிரபல கசிப்பு வியாபாரி ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்

பொசன் தினமான இன்று சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 27.5 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர் சிறுமி மரணம் : அண்ணன் கைது

 

ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.

கைப்பேசியை பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 14 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அச்சமடைந்த அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். அங்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பி, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் காட்டுவதற்காக அவரது தலையை அந்த நீர் வாளிக்குள் திணித்து விபத்து என ஜோடிக்க முயன்றுள்ளார்.

எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் ஏறாவூர் பொலிஸாரின் தீவிர முதற்கட்ட விசாரணைகளின் போது சிறுவனின் இந்தச் செயல் அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 14 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம்

 

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்

 

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அட்டமஸ்தானாதிபதி பதவியில் அதிரடி மாற்றம்!

 


நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை தற்போதைய அட்டமஸ்தானாதிபதியான பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை இன்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கர் ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தப்பட்ட ஜீப் வாகனத்துடன் ஒருவர் கைது

 

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட ஜீப் ரக வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


நேற்று இரவு கொட்டாவ காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜீப் ரக வாகனமானது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளதுடன், முறையான வருமான வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ் அல்லது புகைப் பரிசோதனை அறிக்கை எதுவுமின்றி செலுத்தப்பட்டு வந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த வாகனத்திற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றைப்பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலும் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

 

ஹங்குராங்கெத்த காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட, பகுதியில் பெருந்தோட்டம் ஒன்றில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதைக் கவனித்த தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை உடனடியாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த காவல்துறைப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிராக சரிவைச் சந்திக்கும் ரூபாயின் பெறுமதி


 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 சதவீதத்தினால் (5.4%) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகள் தெரிவிக்கின்றன.

மே 29 ஆம் திகதி வரையிலான சந்தை நிலவரங்களின்படி இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையின் வெளிநாட்டுத் துறை சார்ந்த முக்கிய குறிகாட்டிகளில் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், உள்ளூர் நாணயத்தின் மீதான அழுத்தம் குறையவில்லை என்பதையே இந்த வீழ்ச்சி பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் காலமானார்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்.

தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.

பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தின் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

"பௌத்த சாசனத்தை அழிக்க உள்நாட்டு, வெளிநாட்டுச் சூழ்ச்சிகள் அதிகரிப்பு"

 

பௌத்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படைகளைச் சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த கட்டமைப்பை சிதைத்து அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக, அண்மையில் தலைமை தேரர் தொடர்பான சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஹாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ள நிலையில், அவற்றை மீறி செயற்படுவது சாசனத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சங்க சொத்துக்கள் தொடர்பில் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம்

 

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றங்களை பதிவு செய்துள்ளது.


அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இது கடந்த விலையுடன் ஒப்பிடுகையில் 37.86 அமெரிக்க டொலர்கள் (0.84%) அதிகரிப்பாகும்.

இதேவேளை, வெள்ளியின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. இது 0.38 அமெரிக்க டொலர்கள் (0.50%) வீழ்ச்சியாகும்.

பௌத்தர்களால் கொண்டாடப்படும் "வெசாக் பூரணை தினம்" இன்று

 


உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள், புத்தரின் மும்முறைப் பிறப்பு நிகழ்ந்த இன்றைய வெசாக் பூரணை நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

பௌத்தர்களின் மிக முக்கிய பண்டிகையான "வெசாக் பூரணை தினம்" இந்தியாவில் புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தி என்று அழைக்கப்படும் நாள் ஆகும்.

பௌத்த மதத்திற்கு மட்டுமன்றி இந்து மதத்திற்கும் மிக நீண்ட வரலாற்று மற்றும் ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இந்து மதத்தின் வைணவ கோட்பாடுகளின்படி, கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் 9 ஆவது அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

இலங்கையில் வெசாக் பூரணை தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும்.

வீடுகள், வீதிகள் மற்றும் விகாரைகளில் வெசாக் கூடுகள் (Vesak Lanterns) களிமண் விளக்குகள் மற்றும் மின்விளக்குகள் ஏற்றி ஒளியூட்டுவர்.

வீதியில் செல்வோர் மற்றும் யாத்திரிகர்களுக்கு இலவசமாக உணவு, பானங்கள், ஐஸ்கிறீம் போன்றவற்றை வழங்கும் தர்மச் செயல்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்படும்

மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்தியில் தனியார் வங்கி ஒன்றில் தீப்பரவல்

 


மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


குறித்த தனியார் வங்கியில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.

இந்தநிலையில், தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன், தீப்;பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை சந்திக்கிறதா?

 

இலங்கை வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சந்தையில் விற்பனை செய்யும் எரிபொருட்களினால் பாரிய அளவிலான கட்டமைப்பு நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளின் அடிப்படையில், மானியங்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும் ஏற்படும் நஷ்டம் மிக அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாதாரண பொதுமக்களாலும் போக்குவரத்துத் துறையினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு கூட்டுத்தாபனம் பெருமளவு நஷ்டத்தைத் தாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரக எரிபொருளை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான இறக்குமதிச் செலவு 273.59 ரூபாயாகவும், அதற்கான வரி 136.58 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இதன் மூலம் அதன் உண்மையான சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல், பெட்ரோல் 95 ரகத்தில் ஒரு லிட்டருக்கு 22.46 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளது.

மறுபுறம், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் இந்த நஷ்டத்தின் அளவு மிக மோசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் இறக்குமதி செலவு 560.85 ரூபாயாகவும், வரி 163.27 ரூபாயாகவும் உள்ள நிலையில், அதன் சூத்திர விலை 749.70 ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும், அது சந்தையில் 382 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், ஒவ்வொரு லிட்டர் ஒட்டோ டீசலுக்கும் கூட்டுத்தாபனம் 367.70 ரூபாய் என்ற பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

சுப்பர் டீசலைப் பொறுத்தவரை இந்த நஷ்டம் மேலும் அதிகரித்து லிட்டருக்கு 397.07 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, எவ்வித வரிகளும் விதிக்கப்படாத மண்ணெண்ணெய், ஒரு லிட்டர்; 550.24 ரூபாய் இறக்குமதிச் செலவுடன், 580.53 ரூபாய் சூத்திர விலையைக் கொண்டிருந்த போதிலும், அது வெறும் 255 ரூபாய்க்கே நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையிலும் 325.53 ரூபாய் நஷ்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ளமை மின்சக்தி அமைச்சின் தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Friday, May 29, 2026

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

 

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி பொது மன்னிப்புப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் உள்ள 61 கைதிகளுக்கு இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான 2026.05.30 அன்று சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.