Friday, September 4, 2026

தேயிலைத் தோட்டத்தில் பதற்றம்: சிறுத்தை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்!

 

ஹட்டன் - பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 56 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.35 மணியளவில் தெரேசியா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அதே தோட்டத்தைச் சேர்ந்த வேலு புஷ்பராணி என்ற 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியே சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது.

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏனைய பெண் தொழிலாளர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்தநிலையில், சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண், சக தொழிலாளர்களின் உதவியுடன் பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள்

 

நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகவும், அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை ரூ. 510 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகவும், 425 கிராம் டின்னின் விலை ரூ. 600 ஆகவும் உள்ளது.

சம்பந்தப்பட்ட டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

 

மட்டக்களப்பு, கிரான்குளம் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில், கடற்றொழிலுக்குச் சென்ற மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கிரான்குளம் பகுதியில் வசிக்கும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மூவர் இன்று முற்பகல் சிறிய வள்ளம் ஒன்றில் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த வள்ளம் கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வள்ளம் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற நிலையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முதுகு சொறிந்து விடும் தொழிலில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் இலாபம்: சீன இளைஞரின் அசத்தல் சாதனை!

 

சீனாவில் முதுகு சொறியும் சேவையை (Itch-scratching business) ஒரு தொழில்முனைவோர் வணிகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா(Zhang Xiaoqiao) என்பவரால் 'சுமா' (Suma) என்ற பெயரில் இந்த நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த சேவையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக நகங்களைக் கொண்டு உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுவார்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும்  உதவுவதாகக் கூறப்படும் இந்த சேவைக்கு ஆண்களே அதிகளவில் (70 சதவீதம்) வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் கண்ட ஒரு காணொளியும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்த தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகமாக இருந்ததாக ஜாங் தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டு கிளைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம் இலாபகரமாக இயங்கி வருவதுடன், எதிர்காலத்தில் சீனாவில் 100 கிளைகளைத் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு இணையவாசிகள் நகைச்சுவையான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எல் நினோ காலநிலை 2027 பெப்ரவரி வரை தொடரும் - உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

 



உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பயிர்கள் அழிவடையும் அபாயமும், குடிநீர் உள்ளிட்ட நீராதாரங்கள் வற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராவணா எல்ல நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.

நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்குத் தேவையான புல் மற்றும் நீர் கிடைக்காததால் பால் உற்பத்தியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: இன்று முதல் வழங்கப்படும்!

 

வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.


இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

தேயிலை விற்பனையில் மந்தநிலை: அதிரடியாக குறைந்தது தேயிலை விலை

 



2026 ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையின் தேசிய தேயிலை விற்பனையின் சராசரி விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,174.46 ஆகக் குறைந்துள்ளதாக Forbes and Walker நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025 ஒகஸ்ட் மாதத்தில் கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,182.27 ஆக பதிவாகியிருந்த தேசிய தேயிலை சராசரி விலையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் ரூ.7.81 குறைவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் மதிப்பில், 2025 ஒகஸ்ட் மாதத்தில் கிலோகிராம் ஒன்றுக்கு 3.92 அமெரிக்க டொலராக காணப்பட்ட சராசரி விலை, 2026 ஒகஸ்ட் மாதத்தில் 3.53 டொலராக குறைந்துள்ளது. இது 0.39 டொலர் வீழ்ச்சியாகும்.

2026 ஜூலை மாதத்தில் பதிவான ரூ.1,176.10 என்ற சராசரி விலையுடன் ஒப்பிடுகையில், ஒகஸ்ட் மாதத்தில் ரூ.1.64 என்ற சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், டொலர் மதிப்பில் ஜூலை மாதத்தில் காணப்பட்ட 3.50 டொலரிலிருந்து ஒகஸ்ட் மாதத்தில் 3.53 டொலராக சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதனிடையே, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையின் தேசிய தேயிலை விற்பனையின் சராசரி விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,165.66 ஆக பதிவாகியுள்ளது.

இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ரூ.1,156.37 உடன் ஒப்பிடுகையில் ரூ.9.29 அதிகரிப்பாகும். எனினும், அமெரிக்க டொலர் மதிப்பில் இந்த ஆண்டு இதுவரையான சராசரி விலை 3.62 டொலராக பதிவாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.25 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

தேயிலை உற்பத்திப் பகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, உயர்நிலப் பகுதி தேயிலையின் ஒகஸ்ட் மாத சராசரி விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,057.06 ஆக பதிவாகியுள்ளது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.4.89 குறைவாகும்.

அதேவேளை, தாழ்நிலப் பகுதி தேயிலையின் ஒகஸ்ட் மாத சராசரி விலை ரூ.954.82 (2.87 டொலர்) ஆக பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ.0.88 மற்றும் 0.03 டொலர் அதிகரிப்பாகும்.

மத்தியநிலப் பகுதி தேயிலையின் ஒகஸ்ட் மாத சராசரி விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.1,276.83 ஆக பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ.16.23 குறைவாக இருந்தபோதிலும், 2025 ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.25.74 அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க டொலர் மதிப்பில் மத்தியநிலப் பகுதி தேயிலையின் விலை கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.31 டொலர் குறைந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், தேசிய சராசரி மற்றும் உயர்நிலப் பகுதி மற்றும் தாழ்நிலப் பகுதி தேயிலை விலைகள் ரூபாய் மதிப்பில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதேவேளை, மத்தியநிலப் பகுதி தேயிலை விலை ரூபாய் மதிப்பில் எதிர்மறையான நிலையைப் பதிவு செய்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனினும், அமெரிக்க டொலர் மதிப்பில் அனைத்து தேயிலை உற்பத்திப் பகுதிகளிலும் விலைகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக Forbes and Walker நிறுவனத்தின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட சிறுவன் உயிரிழப்பு

 



மட்டக்களப்பு, வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலையடிவட்டை மருத்துவமனை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழமொன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிலத்தில் கிடந்த நாவல் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அதனை உட்கொண்டதன் காரணமாக சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய், நெப்தா விலை குறைப்பு

 

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!

 



2027 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப முறை குறித்த மேலதிக அறிவிப்புகளுக்காக, 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள், காத்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கோரியுள்ளது.

2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலை இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் இணைய முறை மூலமே கோரப்படும்.

அத்துடன், அடுத்த ஆண்டு தரம் 6 இல் தமது பாடசாலைகளில் சேர விரும்புவோருக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களும் இந்த முறையின் ஊடாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தநிலையில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதிகள் மற்றும் செயல்முறை குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் மற்றும் தண்டனைவிலக்கு கலாசாரத்தை நீக்க வேண்டும் - ஜெனீவா அறிக்கை!

 

மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நேற்று (3) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை,ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. 

இந்தக் காலகட்டத்தில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது.

எனினும், ஊழலை எதிர்த்துப் போராடுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  

இருப்பினும்,சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறை நிறைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பலர் நீண்டகாலம் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. 

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள்  மீது அரசாங்கத்தின் கண்காணிப்புத் தொடர்வதாகவும், நிலங்கள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.

"பதவி அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறைகள் மற்றும் தண்டனைவிலக்கு மரபு ஆகியவற்றைக் கைவிட இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். 

போர்க்கால மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும்,தண்டனைவிலக்கு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

 இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டில் 602 சித்திரவதை மற்றும் வன்கொடுமை வழக்குகளையும், ஏப்ரல் 2026 வரை 138 வழக்குகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. 

மேலும் கடந்த ஆண்டு காவலில் மரணித்த 18 மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 03 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிய குற்றத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயது கைதி கடுமையான தாக்கப்பட்டு மே 3 ஆம் திகதி உயிரிழந்த சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்தனர். 

இது கடும் நெரிசல் உள்ளிட்ட முறையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவ மற்றும் துப்பறியும் பிரிவினரால் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. 

குறிப்பாக ஜெனீவா பயணம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டின் மீது உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசாங்க, பாதுகாப்புத் துறை அல்லது தூதரகப் பணிகளில் உயர் பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் நினைவு கூரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று(04) முன்னிலையானார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாமல் ராஜபக்சவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் அழுத்த மின் பாதைகள் அருகில் பட்டம் விட வேண்டாம்: தேசிய மின்சார அமைப்பு இயக்கம் எச்சரிக்கை!

 

உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிப்பதுடன், அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம், கேட்டுக்கொண்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்; சந்தேக நபர் கைது!

 

கொழும்பு, கொள்ளுப்பிட்டி - 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு வருகை தரவுள்ளது

 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதி மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் 7ஆவது மதிப்பாய்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் விஜயமாகும்.

குறித்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பபஜோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.