Sunday, October 5, 2025

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
இந்த எச்சரிக்கை ஞாயிறு (05) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

விபத்தில் சிக்சிய இளம் காதலர்கள் - காதலி பலி


பின்னவல பொலிஸ் பிரிவில் ஹட்டன்-பலாங்கொடை வீதியில் நேற்று முன்தினம் மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடயில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது காதலியும் பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி காதலி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்

அரநாயக்கவைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.




நடிகை சிம்ரன் கொழும்பை வந்தடைந்தார்

 


பிரமாண்டமான மணப்பெண் போட்டி மற்றும் பட்டமளிப்பு விழா -2025 பங்கேற்பதற்காக, நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாட்டை வந்தடைந்தார்.


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றுவருகின்றது.

இப்பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தமாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு முடித்தவர்கள் என மொத்தமாக 1966 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் இன்றைய இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இப்பட்டமளிப்பு விழா இன்றும் நாளையுமாக இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ளன.

இதன்போது பேராசிரியர் சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு வரலாற்றுத்துறைக்கான கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளின் முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மூன்றாவது அமர்களின் போது முறையே 345 மற்றும் 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும் விழாவின் இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 







தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை !


இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.


குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும்.

ராமேஸ்வரம் தீவும் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இது தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் .

இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மரதன் முறையில் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட குறித்த மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை - செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையகத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.

அந்தவகையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை - தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (03) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடி சென்றடைந்தனர்.

இவர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட, மும்பையைச் சேர்ந்த சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




மட்டக்களப்பில் தனது மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை


மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயது தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்திற்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் தண்டபணம் செலுத்துமாறும்.


அவ்வாறு 3 குற்றத்துக்கும் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை 30 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21 ஆம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில்; வழக்கு தொடரப்பட்டு இடம்பெற்று வந்த பின்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு 2017 ஜூலை 12ம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

தண்டனை சட்டக்கோவை 308 ஆ இரண்டாம் பிரிவின் கீழ் 16 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குறித்த தாயார் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்காக கடந்த 25 ம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்ற போது குற்றவாளிக்கு முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாவை அபராதமும் செலுத்துமாறும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை நஷ்ட ஈடாக செலுத்துமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்து தீர்ப்பளித்தார் 

மிக்சர் வாங்கியதில் தகராறு! கடை உரிமையாளர் உயிரிழப்பு



யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.


ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சிங்காராவேல் தானவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவப் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அணித் தலைவரை தூக்கியது இந்தியா


ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் தொடரில் இந்​திய அணி தற்​போது விளை​யாடி வரு​கிறது. இந்த தொடர் முடிந்​தவுடன் இந்​திய அணி ஆஸ்​திரேலியா சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 19-ம் திகதி தொடங்​கு​கிறது. இந்​தத் தொடருக்​கான இந்​திய அணியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) நேற்று தேர்வு செய்து அறி​வித்​துள்​ளது.

இது​நாள் வரை இந்​திய அணி​யின் கேப்​ட​னாக செயல்​பட்டு வந்த ரோஹித் சர்​மா, பதவியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். புதிய கேப்​ட​னாக ஷுப்​மன் கில்​லும், துணை கேப்​ட​னாக ஸ்ரே​யாஸ் ஐயரும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​நேரத்​தில் அணி​யில் ரோஹித் சர்​மா, விராட் கோலி இடம் பெற்​றுள்​ளனர்.

அதே​போல் டி20 போட்​டிகளுக்​கான இந்​திய அணிக்கு சூர்​யகு​மார் யாதவ் கேப்​ட​னாக​வும், ஷுப்​மன் கில் துணை கேப்​ட​னாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஒரு​நாள் தொடருக்​கான இந்​திய அணி விவரம்ஷுப்​மன் கில் (கேப்​டன்), ரோஹித் சர்​மா, விராட் கோலி, ஸ்ரே​யாஸ் ஐயர், அக்​சர் படேல், கே.எல்.ராகுல் (விக்​கெட் கீப்​பர்), துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், நித்​திஷ் ரெட்​டி, வாஷிங்​டன் சுந்​தர், குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா, முகமது சிராஜ், அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா

நன்றி - tamilmirror



காத்தான்குடி பாலமுனையில் போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட மூவர் கைது !

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் 2700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க தெரிவித்தார்


காத்தான்குடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (03) இரவு நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாலமுனை ஆரையம்பதி மைதானத்துக்கு அருகில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 2700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

இதேவேளை ஆரையம்பதி செல்வாநகர் கடற்கரை வீதியில் 2500 மில்லி கிராம் போதை ஐஸ் போதை பொருளுடன் 23 வயது பெண் ஒருவரும் காத்தான்குடி பிரதேசத்தில் 6000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 35 வயதுடைய பெண்ணொவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட இரு பெண் போதைப்பொருள் வியாபாரிகளும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் கசிப்பு உற்பத்தி ! 10 கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

 


மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரிவிற்குட்பட்ட நரிப்புலித்தோட்டம் வாவியில் நீருக்கடியில் சூட்சுமமான முறையில்10 பரல்  கோடா போதை பொருளை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயித்தியமலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே எம் இக்பால் தெரிவித்தார்


இப் பிரதேசத்தில் கோடா போதை பொருள் உற்பத்தி அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் வௌ்ளிக்கிழமை (03) அன்று மாலை சுற்றிவளைத்த ஆயத்தியமலை பொலிஸார் குறித்த கோடா பரல்களை கைப்பற்றியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

சந்தேக நபர்கள் தப்பியோடிள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட கோடா பரள்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்ஸபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தவும்!

 நாம் ஒன்றிணைந்து ஊடக அடக்குமுறையை ஒழிப்போம்!

மறைமுகமான ஊடக அடக்குமுறையைத் தடுத்துநிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.