எதிர்வரும் பாதீட்டில் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கு விசேட முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளை இனங்கண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி, கலந்துரையாடல்களை நடத்தி தேவைகளை மதிப்பீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவடையும் வரை, மக்கள் தற்போது எதிர்கொள்ளும் குடிநீர் சிக்கல்களைத் தணிப்பதற்காக உடனடி தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
நீர் வழங்கல் சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அரசாங்கம் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி மற்றும் பாலங்கள் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
திட்டமிடப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்தார்.
மேலும், வனவிலங்கு வலயங்களுக்குள் அமைந்துள்ள பயிர்ச்செய்கை நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலுக்கு முக்கிய மையமாகத் திகழும் வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாகத் தரமுயர்த்துதல் மற்றும் அங்கு கலங்கரை விளக்கம் ஒன்றை அமைப்பதன் அவசியம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment