Thursday, July 16, 2026

வாகனேரி ஸ்ரீ பதிரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு!!!






 வாகனேரி அருள்மிகு ஸ்ரீ பத்பதிரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, எண்ணைக்காப்பு நிகழ்வு (16) வியாழன் காலை 7.00 மணியளவில்  மகா கும்பாபிஷேகமும் ஒரே நாளில் பக்தி பூர்வமாக நடைபெற்றது.


 அதிகாலை முதலே விசேட பூஜைகள், யாகசாலை வழிபாடுகள் மற்றும் வேத மந்திர ஓதல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து, பிள்ளையாருக்கு எண்ணைக்காப்பு நிகழ்வு நடைபெற்றதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.


 கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து விசேட தீபாராதனை, அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கான பிரசாத விநியோகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல்

 

2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த தீர்மானம்


நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

கணிதம் போன்ற பாடங்களுக்கு நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதிய ஆட்சேர்ப்பு முறை மூலம் அந்தந்த பாடங்களுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முறையான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆண்டிற்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.

இதற்கான நிதி மற்றும் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 பேர் தோற்றியிருந்தனர். தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதேவேளை அதிபர் சேவை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடுவலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

 

கடுவலை நவகமுவ பகுதியில் உள்ள வந்துராமுல்ல வீதியில் இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள், ஆபரணங்களுடன் மூவர் கைது

 

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆபரணங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை, சீவலிபுர, மற்றும் பாணந்துறை நகருக்கு அருகில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆபரணங்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து, இரண்டு புள்ளிமான் கொம்புகள், யானைத் தந்தத்தை ஒத்த மாதிரி ஒன்று, பல கடற்சிப்பிகள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட நெக்லஸ் ஒன்று, வளையல்கள் இரண்டு, யானைத் தந்தங்கள் நான்கு, தலா இரண்டு புலியின் பற்கள் மற்றும் நகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அலுபோமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பழமையான யானைத் தந்தப் பெட்டி ஒன்று, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயத்துகள் நான்கு, வளையல் ஒன்று மற்றும் சிறுத்தையின் பற்கள் இரண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், பாணந்துறை தெற்கு பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து புலியின் பல் ஒன்று மற்றும் அழிவின் அபாயத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கறுப்பு பவளத்தின் இரண்டு துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 35, 37 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் சீவலிபுர, அலுபோமுல்ல, எவரியாவத்தை மற்றும் எனசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்திடிய வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு - நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

 

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது.


உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மனுவை முழுமையான விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் இரு படகுகள் கவிழ்ந்ததாக அச்சம்

 

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பரப்பில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் எனவும், அவற்றில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான ஆணைக்குழு அச்சம் வெளியிட்டுள்ளது.


குறித்த படகுகளில் பயணித்தவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புதிய உலகை Gen Z தலைமுறையினரே வழிநடத்த வேண்டும்"

 

தங்கள் தலைமுறையினர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாகவும், தற்போதைய புதிய தலைமுறையினரின் (Gen Z) சிந்தனைகளையும் தேவைகளையும் அவர்களே நன்கு அறிவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இளைய தலைமுறையினருடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய உலகை வழிநடத்த இளைஞர்கள் பயமின்றி முன்வந்து தலைமைத்துவத்தை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அவ்வாறு முன்வரும் இளைஞர்களுக்கு முழுமையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது காலத்தில் இளம் தலைவர்களுக்கு எவ்வாறு வாய்ப்பளித்தாரோ, அதேபோல் தற்போதைய இளைஞர்களும் தங்களுக்குத் தேவையான எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்க வேண்டும் என அவர் இதன்போது அறைகூவல் விடுத்தார்.

சொகுசு சிற்றுந்து தீ விபத்து

 

குருணாகல் பாடசாலை வளாகத்தில் 140 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிற்றுந்தை தீயிட்டுக் கொளுத்தியது அங்கிருந்த மாணவன் தான் என சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளுக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனுக்கு எதிராக நேரில் கண்ட சாட்சிகளோ அல்லது அறிவியல் சான்றுகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 15, 2026

தங்கக் காலணி யாருக்கு? அனல் பறக்கும் கால்பந்து உலகக் கிண்ணம்

 

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'தங்கக் காலணி' (Golden Boot) விருதிற்கான போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

தற்போது லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், எம்பாப்பே மூன்றாவது இடத்திற்கான போட்டியில் தனது கோல் கணக்கை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறம், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் களமிறங்குகிறார்.

இவருடன் இங்கிலாந்தின் ஹரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் ஆகிய இருவரும் தலா 6 கோல்களுடன் மெஸ்ஸிக்கு கடும் சவால் விடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளதால், அவர்கள் மெஸ்ஸியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் நோர்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

களத்தில் லியோனல் மெஸ்ஸி, ஹரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் ஆகிய மூவருக்கும் இடையே கோல் அடிப்பதில் நிலவும் இந்த கடும் போட்டி, கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம்: 2026 இன் முதல் பாதியில் 4.75 மில்லியன் பயணிகள் பயணம்

 

இலங்கையின் வானூர்தி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகின்ற வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் சுமார் 4.75 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி முதல் ஜூன் வரை 4,748,481 பயணிகளும், 30,659 வானூர்திகளும் கையாளப்பட்டுள்ளன.

மேலும் வானூர்தி நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி போக்குவரத்து சேவைகள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் 10.21 மில்லியன் பயணிகள், 95,629 வானூர்திகள் மற்றும் 946,811 பரிமாற்றப் பயணிகள் (transit passenger) கையாளப்பட்டனர்.

மக்களையும் கலாசாரங்களையும் இணைப்பதிலும், நாட்டின் சுற்றுலா மற்றும் வானூர்தி போக்குவரத்துத் துறைகளை வலுப்படுத்துவதிலும் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

 

தம்புள்ளை விஹாரை சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கோயில் முற்றத்தில், வாடகை வியாபார தளங்களில் வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீண்டகால பகை காரணமாக ஏற்பட்ட இந்த மோதலில், தற்காலிகமாக வசித்து வந்த 53 வயதுடைய சுனில ரத்நாயக்க என்பவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மனைவி தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள வியாபார தளத்தை சேர்ந்த நபர் இந்தத் தம்பதியினரைத் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தம்புள்ளை தலைமையக காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கிருந்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு

 

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது ஆண் சிறுவன் வீட்டில் வைத்து 'மிக்ஸர்' தின்பண்டத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளது.

அப்போது, அந்த மிக்ஸரில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தொண்டையில் சிக்கிய வேர்க்கடலையை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதனால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியதைக் கண்ட பெற்றோர், சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலை சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் இறுதி கதவை உடைத்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, நிலைமையைக் கட்டுப்படுத்த குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கைதிகள் குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களில், 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வன்முறை தொடங்கிய விதம்

கடந்த ஜூலை 5 ஆம் திகதி, A1 விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லே கம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக உடற்பயிற்சி செய்ய நேரம் வேண்டுமெனக் கோரியுள்ளார்.

அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதையடுத்து, அவர் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை விடுதி திறக்கப்பட்டவுடன், அந்த கைதி A2 விடுதிக்குள் புகுந்து மற்ற கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதே இந்த விரிவான வன்முறைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இரு கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார். மொத்தம் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரிகளைத் தாக்கிய கைதிகள்

வன்முறை சிறைச்சாலை முழுவதும் பரவிய நிலையில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறைச்சாலை அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து 89 அவசரகால மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மறுநாள் (6) காலை உணவளிப்பதற்காக அதிகாரிகள் உள்ளே சென்றபோது, "நாங்கள் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறோம்" என கைதிகள் மிரட்டியுள்ளனர்.

சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்

 

உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தை விட இலங்கையில் சிகரெட்டுகளுக்கான வரி குறைவாக இருப்பதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு 8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என அந்த கொள்கை பகுப்பாய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிகரெட் வரி அறவீடு மூலம் ஏற்படும் நிதி இழப்புகளைக் கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட 'Cigarette Tax Leakage Tracker' எனும் இணைய வழி கண்காணிப்புத் தளத்தை அறிமுகப்படுத்திய போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, புகையிலை நுகர்வை வெற்றிகரமாகக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஒரு சிகரெட்டின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75% வரியாக அறவிடப்பட வேண்டும்.

இலங்கை 2018 ஆம் ஆண்டில் இந்த மட்டத்துக்கு நெருக்கமாக வந்திருந்தது. அப்போது சில்லறை விலையில் 74% வரியாக அறவிடப்பட்டது. இருப்பினும், அண்மைக்காலமாக அந்த வரி வீதம் குறைவடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் அது 67% என்ற மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையே பாரிய வருமான இழப்புக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கும் வெரிட்டே ரிசர்ச், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகரெட் வரி கொள்கைகளின் நிதித் தாக்கத்தை நேரலையில் கண்காணிப்பதற்கான வெளிப்படையான கருவியாக இந்தத் தளம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மோசடியாளர்களிடமே வங்கிக் கணக்கை உறுதிப்படுத்திய அதிகாரிகள்! - நாடாளுமன்ற அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

 

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, தவறான தரப்பினரின் கைக்குச் சென்ற விவகாரத்தில், வங்கிக் கணக்குத் தகவல்கள் சந்தேகத்திற்குரியவை என இலங்கை மத்திய வங்கி எச்சரித்திருந்த போதிலும், அவற்றை மோசடியாளர்களிடமே அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொண்டமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை, அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், 'எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் அவுஸ்திரேலியா' (Export Finance Australia) நிறுவனத்துக்கு வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தும் போது இடம்பெற்ற இணையவழி தாக்குதல் மற்றும் மோசடி தொடர்பிலேயே இந்த அறிக்கை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பயனாளியிடம் பணம் செலுத்தப்படுவதை அவதானித்த இலங்கை மத்திய வங்கி, அந்த முகவரி 'எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் அவுஸ்திரேலியா' நிறுவனத்தின் முகவரியுடன் பொருந்தவில்லை என சுட்டிக்காட்டியிருந்தது.

நிதி மோசடி குறித்த சந்தேகங்களை எழுப்பி, உண்மையான கடன் வழங்குநரிடம் தகவல்களை மீள உறுதிப்படுத்துமாறும் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி நிதியமைச்சுக்கு மத்திய வங்கி அறிவித்திருந்தது.

மத்திய வங்கியின் எச்சரிக்கையைப் புறந்தள்ளி, உண்மையான கடன் வழங்குநரைத் தொடர்புகொள்வதற்குப் பதிலாக, மோசடியில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கே மின்னஞ்சல் அனுப்பி, அவர்களிடமே வங்கிக் கணக்கு விபரங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அபுதாபியில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக 'மிஷ் குளோபல்' (Mish Global LLC), 'எல்.எம்.எச் குளோபல்' (LMH Global LLC) மற்றும் 'சிஃப்ரா வதன்' (Sifra Watan Project Management Services) ஆகிய நிறுவனங்களுக்கு அரச கடன் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 'அவுஸ்திரேலிய ஏற்றுமதி கடன் முகவரகம்' (Australia’s export credit agency) எனக் கூறிக்கொண்டுள்ளன.

இவ்வாறான ஒரு போலி நிறுவனங்களுக்கு ஏன் பணம் செலுத்தப்படுகிறது என்பது குறித்து எவரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு (EXIM Bank) இலங்கை செலுத்தவிருந்த பணம் மோசடியானதாக இருக்கலாம் என 'ஜே.பி. மோர்கன்' (J.P. Morgan) நிறுவனத்தின் மோசடி தடுப்புப் பிரிவு எச்சரித்து, அந்தப் பரிவர்த்தனையை நிறுத்தியிருந்தது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மோசடியான டொமைன் பெயர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும், இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு பிரிவுக்கும் (CERT) முறைப்பாடளித்தது.

இவ்வாறான ஒரு முறைக்கேடான பரிமாற்றம் தவிர்க்கப்பட்ட போதும், அதற்கு 11 நாட்களின் பின்னர், 2026 ஜனவரி 20 ஆம் திகதி 'மிஷ் குளோபல்' நிறுவனத்துக்கு உறுதிப்படுத்தப்படாமல் மீண்டும் திறைசேரியால் 997,799 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, 'டிட்வா' (Dithwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட வளப் பற்றாக்குறையினால் கடன் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், பணம் ஏற்கனவே மோசடியாளர்களுக்குச் சென்றிருந்ததாலும், உண்மையான கடன் கொடுநரான அவுஸ்திரேலிய தரப்பிடம் மேலதிக கால அவகாசத்தைக் கோருவதற்கு எவரோ ஒருவர் முயற்சித்திருந்தமையும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை

 

கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ரோபோடிக் முறைத் தானாக இயங்காது, மாறாக சத்திர சிகிச்சை நிபுணரின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும்.

நிபுணர்கள் விசேட கன்சோல் மூலம் ரொபோவின் கைகளை இயக்கி, துல்லியமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நவீனத் தொழில்நுட்பத்தினால் இரத்த இழப்பு குறைதல், சிறிய கீறல்கள், தொற்று அபாயம் குறைதல் மற்றும் சத்திர சிகிச்சை பிழைகள் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tuesday, July 14, 2026

ஏதிலிப் பெண்கள் அணியை அரவணைக்கும் ஐசிசி - ஐசிசியின் வரலாற்று முடிவு

 

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஏதிலிப் பெண்கள் கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான காலக்கெடுவை ஐசிசி நிர்ணயித்துள்ளது.
 
இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் குறித்த மகளிர் அணி சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

தலிபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் இல்லாத நிலையில், இந்த ஏதிலிப் பெண்கள் அணி வேறு ஒரு பெயரில் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்க ஐசிசி வழிவகை செய்துள்ளது.

இந்த அணியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

2030 இலக்கை நோக்கிச் செல்லும் வகையில், இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான பயிற்சி, உடற்பயிற்சி வசதிகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021இல் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பல வீராங்கனைகள் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

இந்தநிலையில் ''எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. எங்களின் திறமைக்கு உரிய வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என குறித்த வீராங்கனைகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்த தனித்துவமான பெண்கள் அணி, சர்வதேச அரங்கில் சாதனை படைக்கும் நாளை நோக்கி கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய திட்டம்!

 

Uploading: 4460544 of 21610562 bytes uploaded.

சிறு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு வயது வாரியான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

13 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் கண்காணிப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க, இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்.

இணையத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தவிர்க்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த விரிவான மற்றும் உறுதியான திட்ட வரைபடத்தை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 'ஸ்டேட் ஒஃப் தி யூனியன்' உரையின் போது வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே சமூக வலைதளங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அல்லது பரிசீலித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - எண்ணெய் விலை 4% உயர்வு!

 

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 79.22 டொலராகவும், அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 74.45 டொலராகவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள இராணுவ மோதல்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியான போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலக நாடுகளின் அன்றாட மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஏற்றுமதி மையங்கள் மீதான தாக்குதல்களும் விநியோகத்தைப் பாதித்துள்ளன.

எதிர்காலத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க, மத்திய கிழக்கு நாடுகள் மாற்று குழாய்த்திட்டங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

இதன்காரணமாக, எரிசக்தி சந்தையில் பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

Monday, July 13, 2026

ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்

 

லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரு மாணவன் மாத்திரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர், 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை காவல்துறையினரும், பிரதேச மக்களும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

லோர்ட்ஸில் வரலாற்று வெற்றி - இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்!

 

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

457 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் கடைசி நாளில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இந்திய மகளிர் அணியின் சார்பில் சினேகா ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அத்துடன் தீப்தி சர்மா இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

குறித்த போட்டியில் இந்திய வீராங்கனை கிராந்தி கௌட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், யாஸ்திகா பாட்டியா சதம் அடித்தும் லோர்ட்ஸ் மைதானத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சிறப்பாக விளையாடிய யஸ்திகா 158 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை நிலைநாட்டினார்.

லோர்ட்ஸில் ஆடவர் டெஸ்ட் போட்டிகள் தொடங்கி 142 ஆண்டுகள் மற்றும் 150 போட்டிகளுக்குப் பிறகு, அங்கு நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து வருவதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், வீதிப் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் பொதுமக்களை மோசடிக்கு உள்ளாக்க முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுக்கவில்லை என்றும், இந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தியில் உள்ள இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட அல்லது வங்கித் தரவுகளை வழங்க வேண்டாம் என்றும், இத்தகைய மோசடிச் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்

 


அனுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவைப் பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்.

1912 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டு தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில், அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது பின்னால் 12 பிள்ளைகளையும், 325 பேரப்பிள்ளைகள் வரையிலான மிகப்பெரிய குடும்ப வம்சாவளியையும் கொண்டுள்ளார்.

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர் சாம் நீல் காலமானார்

 

ஜுராசிக் பார்க் (Jurassic Park) திரைப்படத் தொடரில் மருத்துவர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரமாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

அவர் தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்

 

இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது, மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களாகவே அதைப் பார்க்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியரும், இலங்கை மக்கள் தொகை சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது குறைந்து வரும் கருத்தரிப்பு விகிதம், மக்கள் தொகையின் முதுமை, இளைஞர்களின் அதிகப்படியான புலம்பெயர்வு மற்றும் மாறிவரும் குடும்ப அமைப்பு போன்ற குறிப்பிடத்தக்க மக்கள் தொகை மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாகப் பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் தலைமுறையினர் தற்போது மிக வேகமாக மாறிவரும் சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் ரீதியான நிச்சயமற்ற தன்மை, மலிவு விலையில் வீட்டு வசதி கிடைப்பதில் உள்ள சிரமங்கள், தொழில் வளர்ச்சியில் உள்ள கடும் போட்டி ஆகிய காரணங்கள், திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்குவது குறித்து அவர்களின் முடிவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இளைஞர்களுக்கு உதவும் வகையில் தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல்,
மலிவு விலையில் வீட்டு வசதி மற்றும் தரமான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்பத்திற்கு ஏற்ற அலுவலகச் சூழலை உருவாக்குதல் ஆகிய கொள்கை மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு - புதிய கண்டுபிடிப்பு!

 

நியூ கினியாவின் தாவோரா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்புப் படிமத்தின் மூலம், இராட்சத கங்காரு இனம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததுள்ளமை உறுதியாகியுள்ளது.

Protemnodon tumbuna என்ற இந்த இராட்சத கங்காரு இனம், மற்றைய கங்காருகள் போல் குதிக்காமல் நான்கு கால்களால் நடந்து வலம் வந்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் இராட்சத விலங்கினங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழியவில்லை என்றும், சில இனங்கள் மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துள்ளன என்றும் இந்த ஆய்வின் ஊடாக உறுதியாகியுள்ளது.

கட்டார் முன்னாள் அமீர் மறைவு: இந்தியாவில் இன்று துக்க தினம் பிரகடனம்

 

கட்டார் நாட்டின் நவீன அரசை உருவாக்கியவரும், முன்னாள் அமீருமான ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவையொட்டி, இன்று (13) இந்திய அரசு, தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று (12) வெளியிட்ட அறிவிப்பில், துக்க தினமான இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரச அலுவலகங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரை "கட்டார் நாட்டை உயர்ந்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அழைத்துச் சென்ற தொலைநோக்கு பார்வையாளர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், "கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் கட்டாருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியாவின் உண்மையான நண்பராக எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துக்க தின நிகழ்வுகள் மூலம், கட்டாருடனான இந்தியாவின் நெருக்கமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளி விலை

 

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.97 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் கசிவால் களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - தீயணைப்பு வாகனம் அனுப்பி வைப்பு

 

மின் கசிவு காரணமாக களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பேங்கொக் களியாட்ட விடுதியில் தீப்பரவல்: 27 பேர் உயிரிழப்பு

 

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13 அதிகாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் சிக்கி குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், "தீப்பரவல் ஏற்பட்டபோது விடுதி முழுவதும் புகை வேகமாகப் பரவியுள்ளது.

அங்கிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, போதிய அவசரக்கால வெளியேறும் வழிகள் இல்லாததால் கழிவறைகளுக்கு அருகில் சிக்கிக்கொண்டனர்.

இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.