அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணியில் சட்டவிரோதமான முறையில் கொட்டப்படும் குப்பை கூழங்களால் நிரம்பி வழிவதுடன், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி அமைந்துள்ளது. இக்காணியில் தினமும் தொடர்ச்சியாக சட்டவிரோத முறையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதனால், வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் தேங்கி மண்டிப் போய்க் காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதியால் தினசரி உடற்பயிற்சிக்காகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன், குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள கடற்கரைப் பகுதியிலும் பரவி விழுந்து கடற்கரையையும் அசுத்தமாக்கி வருகின்றன.
இக்காணியில் கொட்டப்படும் குப்பைகளில்பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு கழிவுப் பொருட்கள் காணப்படுகின்றன.
மழைக்காலங்களில் இந்த உக்காத கழிவுப் பொருட்களில் நீர் தேங்கி நிற்பதனால், டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவுவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.
இப்பகுதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நாய்கள், மாடுகள் மற்றும் காகங்கள் அக்குப்பைகளைக் கிளறி உண்கின்றன. இதனால் அயலில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்க்காலவாய்கள் அசுத்தமடைந்து வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு அவல நிலை நீடித்து வந்தபோதிலும், கல்முனை மாநகர சபையினர் இதுவரையில் எவ்விதமான சட்டநடவடிக்கைகளோ அல்லது குப்பைகளை அகற்றும் பணிகளையோ முன்னெடுக்கவில்லை என மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதற்குரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment