தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு தனியார் பேருந்து ஒன்று, பின்னதூவ நுழைவாயில் பகுதியில் நேற்று (8) மாலை விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து காலி நோக்கிச் சென்ற பேருந்தே, பின்னதூவ நுழைவாயிலில் வெளியேற முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கொன்கிறீட் தூணொன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பேருந்தின் தடுப்பு தொகுதி திடீரென செயலிழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
விபத்து நேர்ந்தவுடன், அதிவேக நெடுஞ்சாலையின் அவசர விபத்து மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவினர் அதிரடியாகச் செயற்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு காலி கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தினால் பேருந்தின் முன்பகுதி முற்றாக நொருங்கியுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
0 comments:
Post a Comment