Thursday, June 25, 2026

இலங்கை - இந்திய வர்த்தகத்தில் புதிய புரட்சி: 'ரூபாய் - ரூபாய்' வர்த்தகம் மூலம் 2 வருடங்களில் 40 வீத வளர்ச்சி இலக்கு!


இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ரூபாய் - ரூபாய்' வர்த்தக முறையின் மூலம், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை 30 வீதம் முதல் 40 வீதம் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிட்ட அவர், இத்திட்டம் அமுல்படுத்தப்படும் முதலாம் ஆண்டிலேயே வர்த்தகப் பரிமாற்றம் 15 வீதம் முதல் 20 வீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த புதிய ‘ரூபாய் - ரூபாய்’ வர்த்தக முயற்சியானது இரு நாடுகளினதும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆழமாக்குவதற்கான ஒரு முற்போக்கான படியாகும் என விவரித்தார். இதன் முக்கிய நன்மைகளாக அவர் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்.


இருதரப்பு வர்த்தகத்திற்காக அமெரிக்க டொலரை சார்ந்திருக்கும் நிலை பெருமளவில் குறையும். இதன் மூலம் நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் டொலர்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

நாணய மாற்றங்களினால் ஏற்படும் நஷ்டங்கள் தவிர்க்கப்படுவதுடன், வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் செலவுகளும் குறையும்.

இந்த பொறிமுறையானது அமெரிக்க டொலருக்கான தேவையை குறைத்து, உள்நாட்டு நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நிதிப் பரிவர்த்தனைகளை வலுப்படுத்துவதற்காக இலங்கையின் மத்திய வங்கி இந்தியத் தரப்புடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் "ரூபாய் முதல் ரூபாய் வரை: இந்திய-இலங்கை வர்த்தகப் பெருவழியை வலுப்படுத்துதல்" என்ற உயர்மட்ட வட்டமேசை மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொள்கை வகுப்பாளர்கள், வங்கியியலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இனிவரும் காலங்களில் கொழும்பில் இயங்கும் இந்திய வங்கிகள், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கை இறக்குமதியாளர்களுக்கு நேரடியாக இந்திய ரூபாயில் கடன் வழங்க முடியும். அதேபோன்று, இலங்கை வங்கிகளும் டொலர் மாற்றீடு எதுவுமின்றி வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு நிதியளிப்பதற்காக இந்திய ரூபாவில் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

தற்போது பிரித்தானியாவை முந்திக்கொண்டு, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான வருடாந்த ஏற்றுமதி 1 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி 5 பில்லியன் டொலர்களை நெருங்கியுள்ளது.

குறிப்பாக, இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கான விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான சுமார் 2.6 பில்லியன் டொலர் பெறுமதியான மூலப்பொருட்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, புதிய ரூபாய் வர்த்தக முறைமை இந்தத் துறைக்கு பெரும் நன்மையளிக்கும்.


இந்தியா - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தோ-லங்கா வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் ‘இந்தியா டெஸ்க்’ அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு முகவரான 'கீதா' (GITA) மூலம் இயக்கப்படும் இந்த விசேட பிரிவு, இலங்கை வர்த்தகர்கள் இந்தியச் சந்தையை எளிதாக அணுகுவதற்கும், அங்குள்ள ஒழுங்குமுறை வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment