Thursday, June 25, 2026

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் 3 பில்லியன் டொலரை நெருங்குகிறது - புதிய GSP+ சலுகைக்கு விண்ணப்பிக்கும் இலங்கை!

 

இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி, நடப்பு 2026 ஆம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகத் திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளர் நாயகம் சோமசேன மஹதியுல்வெவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற 'பெல்கோலக்ஸ் பொருளாதார மன்றத்தில்' (Belgolux Economic Forum) உரையாற்றும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.



உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவை வலுப்படுத்துவது இலங்கைக்கு ஒரு பொருளாதாரத் தேவை மாத்திரமன்றி, வியூகம் சார்ந்த ஒரு முக்கிய வாய்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தகப் பங்களிப்பு குறித்து அவர் கருத்த வெளியிடுகையில்,

கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இருதரப்பு பொருட்கள் வர்த்தகம் சுமார் 3.9 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது.



இருதரப்பு வர்த்தக சேவைகளின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் 1.9 பில்லியன் யூரோக்களாகப் பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமானது 450 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரைக் கொண்ட ஒரு பாரிய சந்தையையும், அதிகளவிலான கொள்வனவுச் சக்தியையும் இலங்கைக்கு வழங்குகிறது.

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வரி வரம்பில் சுமார் 66 வீதமானவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட சலுகைத் திட்டத்தின் மூலம் இலங்கை தொடர்ந்தும் பயனடைந்து வருகின்றது.



ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்னுரிமை வர்த்தக ஏற்பாட்டின் கீழ் உலகளவில் பயனடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை தற்போது 3ஆவது பெரிய நாடாகத் திகழ்கிறது.

ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இந்த கோடைகாலத்தில் அறிவிக்கப்படவுள்ள புதிய GSP+ திட்டத்தின் அடுத்த 10 ஆண்டுகால சுழற்சிக்காக, இலங்கை தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும் உத்தியோகபூர்வ செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி, அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் விநியோகச் சங்கிலி மாற்றங்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில், இலங்கை தனது வர்த்தகப் பங்காளராக ஐரோப்பிய ஒன்றியத்தை நீண்டகால நோக்கில் அணுகுவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கமைய பின்வரும் 3 முக்கிய முன்னுரிமைகளை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.

தற்போதைய சலுகைகளைத் தக்கவைத்து மேலும் விரிவுபடுத்துதல்.



நிர்வாக நடைமுறைகள், அதிக பொருட் செலவுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுத் தாமதங்களைக் குறைத்து, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் ஏற்றுமதியாளர்களின் செலவுகளைக் குறைத்தல்.

உலகளாவிய சந்தைப் போட்டித்தன்மைக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட உயர் ரகப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவித்தல் என்பன அவற்றில் உள்ளடங்கும்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்குவது இன்றியமையாததாகும். எனவே, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இலங்கை போட்டியிடுவதற்கு உள்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் சோமசேன மஹதியுல்வெவ மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment