இலங்கையிலுள்ள நாய்கள் மூலமாக வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், அதற்கான சிகிச்சைகளுக்கும் அரசாங்கம் வருடாந்தம் 5 பில்லியன் ரூபாய்க்கும் (5,000 மில்லியன்) அதிகமான தொகையைச் செலவிடுவதாகச் சுகாதார அமைச்சின் விசர்நாய்க்கடி ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் அமைந்துள்ள சபரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில், ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்டத்தின் விசர்நாய்க்கடி நோயைக் குறைப்பதற்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.
இலங்கையில் வாழும் ஒவ்வொரு 8 மனிதர்களுக்கும் ஒரு நாய் என்ற விகிதத்தில் சனத்தொகை காணப்படுகிறது. இதற்கமைய, நாட்டில் உள்ள வீட்டு நாய்கள் மற்றும் தெரு நாய்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் பரவுவதற்கு 98 வீதம் நாய்களே காரணமாக அமைகின்றன. பூனை, பசு, அணில் போன்ற ஏனைய பாலூட்டி விலங்குகள் மீதமுள்ள 2 வீதத்திற்குக் காரணமாகின்றன. அத்துடன், இந்நோய் பெரும்பாலும் வீட்டு நாய்கள் மூலமே ஏற்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டமானது விசர்நாய்க்கடி நோய் பரவக்கூடிய ஒரு அபாய மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களும் அதிக அபாயம் கொண்ட ஏனைய மாவட்டங்களாக விளங்குகின்றன.
தற்போது இலங்கையிலுள்ள மொத்த நாய் சனத்தொகையில் சுமார் 54 வீதத்திற்கு மட்டுமே வருடாந்தம் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக வருடாந்தம் 800 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. ஒரு நாய்க்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு 3,500 ரூபாய் பணம் செலவாவதாகச் சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாய்கள் மற்றும் பூனைகள் கடிப்பதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குத் தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளை வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் வருடாந்தம் 4,000 மில்லியன் (4 பில்லியன்) ரூபாய்களைச் செலவிடுகிறது.
தற்போதுள்ள 54 வீத தடுப்பூசி வீதத்தை வருடாந்தம் தொடர்ச்சியாக 80 வீதம் வரை அதிகரித்தால், இலங்கையிலிருந்து விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிக்க முடியும். 70களின் காலகட்டத்தில் வருடாந்தம் 300 முதல் 400 வரை காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை, கடந்த 2025ஆம் ஆண்டில் 14 ஆகக் குறைவடைந்துள்ளது.
2028க்குள் இரத்தினபுரியில் விசர்நாய்க்கடியை ஒழிக்க ஆளுநர் உத்தரவு
இங்கு கருத்துத் தெரிவித்த சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, நாய் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக முறையான கூட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்காகச் சுகாதார அமைச்சு, உள்ளூராட்சி மன்றங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், பல்கலைக்கழகங்கள், சபரகமுவ மாகாண சபை மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறு அவர் பணித்தார்.
அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், எதிர்வரும் 2028ஆம் ஆண்டளவில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment