Monday, June 8, 2026

பிலிப்பைன்ஸில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!

 

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவை 8.2 மெக்னிடியூட் அலகாகக் கணிப்பிட்டிருந்த அந்த மையம், பின்னர் அதனை 7.8 மெக்னிடியூட் அலகாக மாற்றியமைத்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவியியல் முகவர் அமைப்புகள் ஆழிப்பேரலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

எனினும், இரு நாடுகளிலும் உடனடிப் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் , இந்த நிலநடுக்கம் 7.0 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், ஒரு மீற்றருக்கும் அதிகமான உயரத்துக்கு அலைகள் எழக்கூடும் என்றும், இது பல மணிநேரங்களுக்கு நீடிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

அதேவேளை, இந்தோனேசியாவின் BMKG அமைப்பு இந்த நிலநடுக்கத்தை 7.7 மெக்னிடியூட் அளவாகப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஆழிப்பேரலை அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்தோனேசியாவின் வடக்கு நகரான மனாடோவிலும் (Manado) இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளும் பசிபிக் சமுகத்திரத்தின் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள 'நெருப்பு வளையம்' (Pacific Ring of Fire) எனப்படும் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment