Tuesday, June 9, 2026

நாடு முழுவதும் 8,000க்கும் அதிகமான நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு!

 


நாட்டின் 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, 8,000க்கும் அதிகமான டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விசேட களப் பரிசோதனை நடவடிக்கைகளின் போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தமாக 31,196 வளாகங்கள் மற்றும் இடங்கள் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு பரிசோதிக்கப்பட்ட இடங்களில், 8,121 இடங்கள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அதிகளவிலான அபாயத்தைக் கொண்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதனால், பொதுமக்கள் தங்களது வீடுகள், பாடசாலைகள் மற்றும் வேலைத்தல சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மேலதிகமாக அறிவுறுத்தியுள்ளனர்.


0 comments:

Post a Comment