Thursday, June 18, 2026

808 மில்லியன் டொலர் முரண்பாடு

 

இலங்கையின் சென்மதி நிலுவை (Balance of Payments) அறிக்கைகளில் "பிழைகள் மற்றும் விடுபடல்கள்" என்பதன் கீழ் பதிவாகியுள்ள 808 மில்லியன் அமெரிக்க டொலர் பாரிய முரண்பாடு தொடர்பாக, இலங்கை மத்திய வங்கி அண்மையில் வழங்கிய தொழில்நுட்ப விளக்கங்கள் குறித்து 'தினன தகுண கூட்டமைப்பு' தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஒட்டுமொத்த சமூகம், நாடாளுமன்றம் மற்றும் நிதி அதிகாரிகள் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரித்து அந்த கூட்டமைப்பு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"பிழைகள் மற்றும் விடுபடல்கள்" என்பது தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏற்படும் முரண்பாடுகளைச் சரிசெய்வதற்காக உலகில் எந்தவொரு நாட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான கணக்கியல் சமரச முறைமை என்ற தொழில்நுட்பக் கருத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தினன தகுண கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இருப்பினும், இவ்வளவு பெரிய பெறுமதியைக் கொண்ட ஒரு தொகையை வெறும் தரவுப் பதிவேற்றத்தில் ஏற்பட்ட "கால தாமதம்" அல்லது சாதாரண தரவுப் பிழை எனக் கருதி நிராகரிப்பது முற்றிலும் பொருத்தமற்றது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் இந்த பெறுமதி, அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சதவீதமாக வளரும்போது, அதை வெறும் தொழில்நுட்பக் குறிப்பு மாத்திரமாக கருத முடியாது என்பது அவர்களின் கருத்தாகும்.

இந்தப் பாரிய மறைப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த பேரின பொருளாதாரத்துக்கும் விடுக்கப்படும் கடுமையான சிவப்பு எச்சரிக்கை எனச் சுட்டிக்காட்டும் கூட்டமைப்பு, இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் இருந்து மிக மோசமான முறையில் நிதி கசிவுகள், தரவு குறைமதிப்பீட்டுப் பதிவுகள், தவறான அறிக்கையிடல்கள் அல்லது சட்டவிரோதமான முறையில் மூலதனம் நாட்டிற்கு வெளியேறுதல் என்பன தீவிரமாக நடைபெறுவதை தெளிவாகக் காட்டுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வாவிடம் நேரடியாக பகிரங்கக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த கூட்டமைப்பு, நாடாளுமன்றம்,காவல்துறை, மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகிய நிறுவனங்கள் இந்த பாரதூரமான விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ அல்லது மூடிமறைக்கவோ எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.


ஏற்றுமதிப் பெறுமதிகளை அதிக மதிப்பிட்டு (Over-invoicing) வெளிநாட்டு நாணயங்களை வெளிநாடுகளில் வைத்திருத்தல் மற்றும் இறக்குமதிப் பெறுமதிகளைக் குறைத்து மதிப்பிட்டு (Under-invoicing) சுங்க வரிகளை ஏய்ப்பு செய்தல் போன்ற வர்த்தகப் பதிவு முறைகேடுகள் பல தசாப்தங்களாக இலங்கை பொருளாதாரத்தை உலுக்கி வரும் ஒரு விடயமாகும்.

இது குறித்து நாடே அறிந்திருந்த போதிலும், இந்த பாரிய அளவிலான நிதி மோசடிகளைத் தடுப்பதற்கு அர்த்தமுள்ள அல்லது நிறுவன ரீதியான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதுவரை பதவியேற்ற எந்தவொரு அரசாங்க நிர்வாகமும் தவறிவிட்டதாக அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்படும் இந்த கட்டமைப்பு ரீதியான தோல்விகள் காரணமாக ஆண்டுதோறும் நாட்டிற்கு இழக்கப்படும் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயத்தின் அளவு பில்லியன் கணக்கான டொலர்களாகும். இது நாட்டின் பொருளாதார மீட்சிச் செயல்பாட்டிற்கு நேரடியாக முட்டுக்கட்டை போடுவதுடன், அதன் சுமையை ஒட்டுமொத்தப் பொதுமக்களின் மீதே சுமத்துகிறது.

முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு உள்ள சட்டரீதியான கண்காணிப்பு அதிகாரங்களை உடனடியாகப் பயன்படுத்துமாறு தினன தகுண கூட்டமைப்பு அதன் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலோட்டமான தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் இது ஒரு முடிவடைந்த விவாதமாக நாடாளுமன்றம் கருதக் கூடாது என அவர்கள் கோருகின்றனர்.

தொடர்ச்சியாக ஏற்படும் இந்த தரவு முரண்பாடுகள் குறித்து கண்டறிவதற்கு, இலங்கை மத்திய வங்கி, இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து மிக ஆழமான தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) ஒன்றை நடத்துவதற்கு அந்த குழு உத்தரவிட வேண்டும் என குறித்த கூட்டமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

அத்துடன், உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்கு வெளியேயுள்ள இணையான சந்தைகள் (ஹவாலா/உண்டியல்) ஊடாக பில்லியன் கணக்கான டொலர் பணம் நாட்டிற்கு வெளியே செல்ல இடமளித்து விட்டு, இலங்கையினால் உண்மையான சென்மதி ஸ்திரத்தன்மையையோ அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மையையோ அடைய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கம் இனிமேலும் கணக்கியல் கலைச்சொற்களுக்கு பின்னால் மறைந்திருக்காமல், இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத நிதிப் பாய்ச்சல்களுக்கு எதிராக உடனடியாகத் தீர்மானமிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கூட்டமைப்பு மேலும் கோரியுள்ளது.

0 comments:

Post a Comment