பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு கல்வி அமைச்சே பெரும் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தேவைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் பெற்றோருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதுடன், இது மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது குறைவதற்குக் காரணியாக அமைந்துள்ளது என்று ஆங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பல பெற்றோரால் பாடசாலைகள் கோரும் செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்றும், அதேநேரம் தனியார் மேலதிக வகுப்புக்களின் விரைவான பரவல் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டது. மாணவர்கள் ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்பதை கண்டறிந்து, அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண பாடசாலைகளும் கல்வி அமைச்சும் இணைந்து செயற்பட வேண்டும்," என அவர் கூறினார்.
கல்வி நிர்வாகத்தில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளும் தோல்விகளுமே நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment