முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் முதலாம் கட்ட 18 மாத ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு, ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையின் துல்லியத்தன்மை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குறித்த ஆய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் தாக்கத்தையோ அல்லது அதன் முக்கியத்துவத்தையோ ஆராயாமல், வெறும் எண்ணிக்கையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மைத்ரிபால சிறிசேனவின் முதல் 18 மாத ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டம் மற்றும் தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சட்டங்கள் ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தியதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்து, பொதுமக்களுக்கான சுகாதார மற்றும் தகவல் அணுகுமுறையை உறுதிப்படுத்தியதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 26 மாத காலப் பகுதியில், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், பொருளாதார மாற்றுச் சட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் உள்ளிட்ட 75 முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் ஐக்கிய தேசியக் கட்சி நினைவு கூர்ந்துள்ளது.
மறுபுறம், முறையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம், இதுவரை அத்தகைய தாக்கமேற்படுத்தக்கூடிய எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சலுகைகளை நீக்கும் சட்டங்களைத் தவிர, தற்போதைய அரசினால் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் சாடியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கியுள்ளதாகவும், வெறும் சட்டங்களின் எண்ணிக்கையை மட்டும் காட்டி அரசாங்கத்தின் செயல்திறனைப் பாராட்டுவது போன்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கவே இத்தகைய அறிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.
0 comments:
Post a Comment