இலங்கைக்கு ஒன்பது நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்கான உபகுழு, இலங்கைக்கான தங்களது விஜயத்தை நாளை மறுதினம் நிறைவுசெய்யவுள்ளது.
அதன்படி, இந்த குழு தமது கள ஆய்வுகளின் அடிப்படையிலான இரகசிய முதற்கட்ட அவதானிப்பு அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.
கடந்த ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக்குழுவினர், நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகள் மற்றும் காவல் நிலையங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு கைதிகளின் நிலைமைகளை ஆராய்ந்ததுடன், அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விஜயத்திற்குப் பின்னர், சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பிடுவதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விஜயத்தின் முக்கிய சந்திப்பொன்று இந்த வாரம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, சித்திரவதைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஐ.நா. குழுவினர் கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நா குழுவினருக்கு விரிவாக விளக்கமளித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கூற்றுப்படி, சித்திரவதை மற்றும் ஏனைய கொடுமையான, மனிதநேயமற்ற அல்லது அவமதிப்பானநடத்துகை அல்லது தண்டனைக்கு எதிரான மாநாட்டின் விருப்பத்துக்குரிய நெறிமுறையின் 16 ஆவது பிரிவுக்கு இணங்க, இந்த உபகுழு தனது இரகசிய முதற்கட்ட அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்துக்கும், தேசிய தடுப்பு பொறிமுறைக்கும் (NPM) வழங்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த குழுவினர் தாங்கள் கண்டறிந்தவை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி இரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பர்.
இந்த மாநாட்டின் விதிகளின் படி, இலங்கை அதிகாரிகள் பகிரங்கப்படுத்துமாறு கோரினால் ஒழிய, இந்த அறிக்கை முற்றிலும் இரகசியமாகவே பேணப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த குழுவினர் மேற்கொண்ட விஜயத்தின் அறிக்கை கூட இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment