பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும்போது அதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதும் பாடசாலை அதிபர்களின் முழுமையான பொறுப்பாகும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பகுதியிலுள்ள தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோர், மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே கல்வி அமைச்சின் செயலாளர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கைகளின்படி, மாணவர்களைப் பாதுகாப்பதற்கான தெளிவான பொறுப்புகள் அதிபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்குள் சிறுவர் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி, மாணவர்கள் எவ்விதமான உடல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் இருப்பதை பாடசாலை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்துப் பாடசாலைகளிலும் 'பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, புகார்களுக்குச் சரியான முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment