Tuesday, June 23, 2026

வரலாறு காணாத சுற்றுலா வளர்ச்சி - வருமானத்தில் எதிர்பாராத அதிர்ச்சி

 

இலங்கைக்கு மே மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ள போதிலும், அமெரிக்க டொலருக்கு நிகரான வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.


எனினும், இலங்கை ரூபாயின் அடிப்படையில் இந்த வருமானம் அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



இவ்வருடத்தின் மே மாதத்தில் 145,745 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது 2025ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.65 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை வரலாற்றில் மே மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், 2026 மே மாதத்தில் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக, அதாவது 5.11 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரம், இலங்கை ரூபாய் மதிப்பில் இவ்வருமானம் கடந்த ஆண்டு 49.1 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், இவ்வருடம் 50.6 பில்லியன் ரூபாயாக 3.05 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்தமையே இந்த மாற்றத்திற்கு முதன்மைக் காரணமாகும்.



மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஈட்டப்பட்ட 1.54 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் 11.9 சதவீத வீழ்ச்சியாகும்.

0 comments:

Post a Comment