Wednesday, May 27, 2026

மழை, வெள்ளத்தால் நாட்டில் 18,000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

 நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 18,500 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) விடுத்துள்ள புதிய நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று (26) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, கடந்த மே 22 ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4,854 குடும்பங்களைச் சேர்ந்த 18,526 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த காலப்பகுதியில் சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் 3 வீடுகள் முழுமையாகவும், 926 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.


மாவட்ட ரீதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.




அங்கு 1,389 குடும்பங்களைச் சேர்ந்த 5,268 நபர்கள் வானிலை தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


கொழும்பு மாவட்டத்தில் 1,571 குடும்பங்களைச் சேர்ந்த 6,773 நபர்களும், புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, நாடு தழுவிய ரீதியில் 9 பாதுகாப்பான அமைவிடங்கள் (நலன்புரி முகாம்கள்) நிறுவப்பட்டு, அவற்றில் தற்போது 69 குடும்பங்களைச் சேர்ந்த 245 நபர்கள் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, காலி, புத்தளம், கொழும்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய 8 மாவட்டங்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment