Thursday, May 21, 2026

19 வயது யுவதியின் சோக முடிவு

 யாழ்ப்பாணத்தில் வரதட்சணை கொடுமையால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


தகவல்களின் படி, குறித்த யுவதி இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நபரையே நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார். எனினும், அவரது கணவரின் தாயார் இந்தத் திருமணத்தை ஏற்காத நிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது.


அதனைத் தொடர்ந்து, 25 பவுண் தங்க நகை மற்றும் வீடு வரதட்சணையாகக் கோரி, பெண்ணுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆனால், பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த அந்த யுவதியின் குடும்பத்தினரால் அவற்றை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த கணவரின் தாயாருக்கு எதிராக, கணவன் வெளிநாடு செல்ல வேண்டாம் என அந்த யுவதி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


இதற்குப் பதிலளித்த கணவர், தனது தாயார் கேட்ட வரதட்சணை வழங்கப்பட்டால் மட்டுமே வெளிநாடு செல்லாமல் இருப்பேன் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தச் சூழ்நிலையால் கடும் மனவேதனை மற்றும் விரக்திக்குள்ளான அந்த யுவதி, நேற்று காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த பெண்ணின் உடலின் மீது திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


வாழ்க்கையில் ஏற்படும் எத்தகையப் பிரச்சினைகளுக்கும் உயிர்மாய்ப்பு ஒரு தீர்வாகாது என்பதை சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இருப்பினும், இவ்வாறான கொடுமையான நிகழ்வுகள் தனிமனிதர்களின் மன அழுத்தத்தையும், சமூகத்தின் ஆதரவின்மையையுமே வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.




0 comments:

Post a Comment