ஹப்புத்தளை, தம்பதென்னை வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில், காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் மருந்துகளின் விலைகளை மாற்றியமைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, குறித்த மருந்தகத்தில் பல பாரதூரமான சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
காலாவதியான மருந்துகளை விற்பனைக்காக வைத்திருந்தமை,காலாவதியான மருந்துகளின் மீது அச்சிடப்பட்ட விலைகளை மாற்றியமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தமை,உற்பத்தியாளர்களால் குறிப்பிடப்பட்ட அசல் விலையை அகற்றிவிட்டு, அதிக விலையை காட்சிப்படுத்தியமை.
இந்த முறையற்ற செயற்பாடுகள் நுகர்வோரைச் சுரண்டுவது மட்டுமல்லாமல், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாகவும் அமைவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான மருந்துத் தொகைகளை அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த மருந்தகத்தின் உரிமையாளருக்கு எதிராக பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது, அவற்றின் உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி மற்றும் அச்சிடப்பட்ட விலையைச் சரிபார்க்குமாறும், கொள்வனவின் போது முறையான ரசீதைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment