Thursday, May 28, 2026

இலங்கையில் பரவும் மூளைக்காய்ச்சல்: அறிகுறிகள்

 


இலங்கையில் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஆண்டுதோறும் தொற்றுநோயாகப் பதிவாகின்றன என்று தொற்றுநோயியல் பிரிவின் மற்றொரு விசேட சமூக மருத்துவ நிபுணரான துஷானி தபரெரா தெரிவித்தார்.


தற்போதைய ஆய்வகக் கண்டுபிடிப்புகளின்படி, இந்தத் தொற்றானது மூளையைப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது என அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களினாலும் இந்நோய் ஏற்படலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த ஆண்டின் முதலாவது நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் கொடபொல - தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டார்.

கடந்த ஒரு மாத காலத்தில் நுவரெலியா மாவட்டத்தின் ரிகில்லகஸ்கட, கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய மற்றும் பதுளை மாவட்டத்தின் வெலிமடை, தியத்தலாவை ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் சுமார் 200 பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், தற்போது சுமார் 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல், வாந்தி, தலைவலி மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். எனினும், இதுவரை மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

தற்போது நிலவும் மழைக்கால காலநிலை மற்றும் மக்கள் பெருமளவில் கூடுவதைக் கருத்தில் கொண்டு, தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்துத் ஆயத்த நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலைகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற மக்கள் நெரிசல்மிக்க இடங்களில் மூளைக்காய்ச்சல் எளிதாகப் பரவக்கூடும் என்று எச்சரித்த அவர், "எனவே, உடல்நிலை சரியில்லாதவர்கள் பொதுக் கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்" என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment