களுத்துறையில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
சிற்றூந்தில் வந்த துப்பாக்கிதாரிகள், உந்துருளியில் பயணித்த தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு முன்னதாக துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிய ரக வெள்ளை நிற சிற்றூர்தி ஒன்று, களுத்துறை – மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் முதலில் இந்த சிற்றூர்தியில் வந்து, பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துக்கு மாறியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுப் பகுதிக்குச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சிற்றூந்து, தெபுவன, நேபொட அஞ்சல் நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிற்றூந்தில் கண்ணாடி உடைந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பின்னர் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக, களுத்துறை தெற்கு காவல்துறையினரின் கீழ் மூன்று விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment