தனியார் பெருந்தோட்டத் துறையில் கர்ப்பமடைந்தது முதல், பிரசவம் முடிந்து ஆறு மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் நாளாந்த முழுச் வேதனத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் எனப் பெருந்தோட்ட அமைச்சு அறிவித்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஆறு மாதக் குழந்தைகளைக் கொண்ட பாலூட்டும் தாய்மார்கள், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாளாந்த கொழுந்து பறிக்கும் இலக்கை எட்டத் தவறினால், சில தனியார் தோட்ட நிறுவனங்கள் அவர்களுக்கு அரை நாள் வேதனத்தை மாத்திரமே வழங்குகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் புகார்களைத் தொடர்ந்தே அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பெருந்தோட்டப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,
"அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டத் துறைகளில் உள்ள அனைத்துப் பெண் தொழிலாளர்களும் ஏற்கனவே தங்களது முழுமையான வேதனத்தைப் பெற்று வருகின்றனர். எனினும், தனியார் துறையில் இச்சலுகையைப் பெற்றுக்கொள்ளாத பெண் தொழிலாளர்கள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மிக விரைவில் முழுச் வேதனமும் கிடைக்க வழிவகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
அத்துடன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக செல்லும் நாட்களில் தனியார் துறை தோட்டப் பெண் தொழிலாளர்களுக்கு வேதனம் மறுக்கப்படும் பிரச்சினையும் உடனடியாகத் தீர்க்கப்பட்டு, அந்த நாட்களுக்கான நிலுவைச் வேதனமும் அவர்களுக்கு வழங்கப்படும் எனப் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் உறுதியளித்துள்ளார்.
சில குறிப்பிட்ட தோட்டங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக மலையக மறுசீரமைப்புக்கான சிவில் கூட்டமைப்பின் அமைப்பாளர் செல்வராஜா இராஜசேகர் முதன்முதலில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.
பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்கள் குறித்து அவர் ஆவணப்படுத்தியுள்ள விபரங்களில்,
கர்ப்ப காலத்தில் பெண்களால் நீண்ட தூரம் பயணித்து, மலைப்பாங்கான சரிவுகளில் ஏறி, நாளாந்தம் நிர்ணயிக்கப்படும் கொழுந்து இலக்குகளை எட்ட முடிவதில்லை.
பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதோ, சுத்தப்படுத்தப்படுவதோ இல்லை. தேயிலைச் செடிகளுக்குத் தேவையான உரங்கள் இடப்படுவதில்லை. அதேவேளை, சிறுத்தைகள், பாம்புகளின் நடமாட்டம் மற்றும் ஒவ்வொரு மரங்களிலும் குளவிக் கூடுகள் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள் உயிராபத்துடனேயே பணியாற்ற வேண்டியுள்ளது.
கர்ப்ப காலத்தின் உடல் ரீதியான அசௌகரியங்களுக்கு மத்தியிலும், பெண் தொழிலாளர்கள் நாள் முழுவதும் உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், அவர்களின் பணிஸ்தலங்களில் இன்றுவரை முறையான சுகாதாரமான மலசலகூட வசதிகள் கூட அமைத்துக் கொடுக்கப்படவில்லை எனவும் வெளிப்படுத்தினார்.
இலங்கையின் தேசியப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் மலையகத் தோட்டப் பெண்களின் மகப்பேற்றுக்கால உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இவ்வாறாகப் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களினால் மீறப்பட்டு வரும் பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தின் இந்த புதிய தலையீடு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment