Thursday, May 28, 2026

இலங்கையின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு

 

சர்வதேச உயிரியல் பல்வகைமை தினத்தை (International Day for Biological Diversity) முன்னிட்டு, இலங்கையின் மிகப்பெரிய நகர்ப்புற வண்ணத்துப்பூச்சி பூங்கா (Urban Butterfly Park) அநுராதபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) ஆர்.டி.எஸ்.ரணதுங்க, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் ரஞ்சன ஜயசிங்க, அநுராதபுரம் மாநகர ஆணையாளர் நிஷாந்த ரோய் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் தலைமையில் இத்திறப்பு விழா அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் முதல் முறையாக அநுராதபுரத்தில் அமைக்கப்பட்ட இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவானது, பிராந்தியத்தின் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாக்கும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் அளவிடும் முக்கிய குறியீடாக இங்குள்ள வண்ணத்துப்பூச்சிகள் விளங்குகின்றன என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வெறும் பொழுதுபோக்கு இடமாக மட்டுமன்றி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுக்கான சிறந்த ஆய்வு மையமாகவும், பொதுமக்களுக்கு மன அமைதியை வழங்கும் இயற்கை தளமாகவும், சிறுவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கு மையமாகவும் பயன்படுமென்று திறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிதிகள் தெரிவித்தனர்.

மேலும், வண்ணத்துப்பூச்சிகளைக் கவரும் வகையிலும், அவற்றின் இயற்கையான இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையிலும் 60 க்கும் மேற்பட்ட அரிய வகை தாவர இனங்கள் இப் பூங்காவில் நாட்டப்பட்டுள்ளன.

இதனுடன் பூங்காவுக்கு வருகை தருபவர்கள் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சக்கரம் மற்றும் அவற்றின் வகைகள் தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் நவீன தகவல் மையமொன்றும் (Information Centre) இங்கு அமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

0 comments:

Post a Comment