மில்லியன் கணக்கான சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்யும் புதிய சட்ட விதிமுறைகளை மலேசிய அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத் தளங்கள் அனைத்தும், பயனர்களின் வயதை உறுதிப்படுத்தும் நடைமுறையைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
இந்த விதிகளுக்கு இணங்கத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் (சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வரை அபராதம் விதிக்கப்படும். எனினும், சட்டத்தை மீறி சிறுவர்கள் கணக்குகளைத் தொடங்கினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படாது.
இணையக் கொடுமைப்படுத்துதல் (Cyberbullying), தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சிறுவர்களைச் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் அம்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளும் இவ்வாறான வயதுக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானியா, பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இருப்பினும், மெட்டா நிறுவனம் போன்ற தொழில்நுட்ப அமைப்புகள், இத்தகைய முழுமையான தடைகள் காரணமாக பதின்ம வயதினர் பாதுகாப்பற்ற மாற்று இணையப் பக்கங்களை நாடக்கூடும் என எச்சரித்துள்ளன.
அத்துடன், வயதை உறுதிப்படுத்த அரசாங்க அடையாள அட்டைகளைக் கோருவது தரவுத் தனியுரிமை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பெற்றோருக்கு அபராதம் இல்லாததால் இந்தச் சட்டத்தைத் தட்டிக்கழிப்பது எளிது என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 comments:
Post a Comment