Tuesday, June 2, 2026

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 5% அதிகரிப்பு

 

அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை 5 வீதத்தினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் காரணமாக, டீசல் விலை ஒட்டுமொத்தமாக சுமார் 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வுடன் இணைந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, போக்குவரத்துத் துறைக்கு அத்தியாவசியமான எஞ்சின் எண்ணெய், டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளன.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் வாகனங்களுக்கான பராமரிப்புச் சேவைச் செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த பாரவூர்திகளின் பராமரிப்புச் சேவைகளைச் சரியாகப் பேணுவது கட்டாயமானதாகும் எனச் சனத் மஞ்சுள அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இறக்குமதி, ஏற்றுமதித் துறையைத் தடையின்றி நடத்துவதற்கு இந்த வாகனங்களின் பராமரிப்புச் சேவைகளை நாங்கள் முறையாகச் செய்ய வேண்டும். ஆனால் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையால் பராமரிப்புச் செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளன. இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்திற் கொண்டே நாம் இந்த விலையேற்றத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதற்கமைய, கொள்கலன் போக்குவரத்துச் சேவைகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் இன்று முதல் 5 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment