கொழும்பு, பொரளை பகுதியில் போலி ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை தயாரித்து வந்த இரகசிய மத்திய நிலையம் ஒன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான போலி ஆவணங்கள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொரளை, என். எம். பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நீண்டகாலமாக இந்த போலி ஆவண தயாரிப்பு மத்திய நிலையம் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, 600 போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள், காணிப் பதிவு அலுவலகத்தின் முத்திரையிடப்பட்ட பிரதிகள் அடங்கிய 2 அசல் கோப்புகள், 4 போலி தேசிய அடையாள அட்டைகள், போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் தட்டச்சு இயந்திரம் ஒன்று, ஒரு சிற்றூந்து மற்றும் ஒரு உந்துருளி, 1.5 மில்லியன் ரூபா பணம் ஆகியன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட இலச்சினைகளுள் முக்கிய அரச திணைக்களங்கள், சமாதான நீதவான்கள், சான்றுறுதியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளின் போலி இலச்சினைகளும் அடங்குகின்றன.
குறித்த இடத்தை காவல்துறையினர் முற்றுகையிட்ட போது அங்கு இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவலின் அடிப்படையில், நுகேகொட, தெல்கந்த பகுதியில் வைத்து மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 54, 55 மற்றும் 59 வயதுடைய பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment