Saturday, June 6, 2026

மஹரகமவில் வாயில்லா ஜீவன்கள் மீது தாக்குதல் - சட்டத்தரணியின் தலையீட்டையடுத்து சந்தேகநபர் கைது

 

மஹரகமவில் வீடொன்றின் முன்பாகவிருந்த கட்டாக்காலி நாய்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவர் மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்ட விலங்குக்காக நீதி கோரி காவல் நிலையத்திற்குச் சென்ற போது முறைப்பாட்டை ஆரம்பத்தில் காவல் துறையினர் ஏற்க மறுத்ததான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நடமாடும் நபர் ஒருவர், வீதியில் நின்ற நாய்கள் மீது முதலில் கல்லெறிந்து துரத்தியுள்ளார். பின்னர், இரவு நேரத்தில் வருகை தந்து உறங்கிக் கொண்டிருந்த நாய்களை தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த வெள்ளை நிற நாய் ஒன்று பலத்த காயமடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையிலும் குறித்த நபர் தடியுடன் வந்து விலங்குகளைத் துரத்தித் தாக்கியுள்ளார். இதனை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர்கள் அவரைத் தடுத்துக் கண்டித்த போதிலும், அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அன்றைய தினமே மதியம் 12 மணியளவில், வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது அவர் திட்டமிட்டு உந்துருள்ளியால் மோதியதான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மஹரகம காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுக்கு (MO Branch) சென்று முறைப்பாடு அளிக்க முயன்றபோது, அங்கிருந்த நிலையப் பொறுப்பதிகாரி (OIC) முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளார்.

"இவை கட்டாக்காலி நாய்கள் என்பதால், இவற்றின் பொறுப்பை நீங்களே ஏற்க வேண்டும்" என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதற்கு வீட்டின் உரிமையாளர்கள் , "இவை வாயில்லாப் பிராணிகள், இவற்றால் பேச முடியாது என்பதால்தான் நாங்கள் நீதி கேட்டு வந்துள்ளோம்" என வாதிட்டுள்ளனர்.

இருப்பினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், சட்டத்தரணி ஊடாக காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியிடம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவல்துறையினர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

அதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment