கண்டி, ரங்கல - உடிஸ்பத்துவ பகுதியில் தனது 22 வயதுடைய மனைவியைக் கொலை செய்து, உடலை சதுப்பு நிலத்தில் புதைத்துவிட்டு, அவர் காணாமல்போயுள்ளதாக நாடகமாடியதாக கூறப்படும் 28 வயதுடைய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல்போனமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ரங்கல காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே இந்த கொடூரக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உடிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக ரங்கல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்தேகநபரான கணவனும் அவரது தாயாரும் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று, குறித்த பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல்போயுள்ளதாக இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
எனினும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் அந்தப் பெண் அவரது கணவனால் படுகொலை செய்யப்பட்டு, குற்றம் மறைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் அந்த பகுதியை விட்டுத் தப்பியோடியிருந்தார்.
தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக ரங்கல காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நேற்று (3) உடிஸ்பத்துவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, காவல்துறையினரைக் கண்ட சந்தேகநபர் விஷமருந்த முயன்றுள்ளார்.
தற்போது அவர் காவல்துறைக் காவலில் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், காவல்துறையினர் நடத்திய மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், தம்பதியினரின் வீட்டிற்குப் பின்னால் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலம் நேற்று (3) தோண்டி எடுக்கப்பட்டது. உடலம் மீதான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக உடலின் மாதிரிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ரங்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment