காலி பகுதியில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன் மீது அநாகரிகமான முறையில் கொடூரத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெரலபநாதர, தந்தெனியகந்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி பதிவொன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பகிரப்பட்டதையடுத்து, சிறுவனின் தாயாரால் காலி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இந்த முறைப்பாடு மற்றும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், காலி - மிலித்துவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண், அவரது 47 வயதுடைய கணவன், 19 வயதுடைய மகன் மற்றும் 17 வயதுடைய மகள் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்தனர்.
முன்னதாக, சொத்து திருட்டுப் முறைப்பாடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நேற்று (3)காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சிறுவன், தற்போது சிறைக்காவலின் கீழ் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரும் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சிறுவனால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் திருட்டுச் சம்பவம் மற்றும் அந்த சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்தும் காவல்துறையினர் இரு வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment