Monday, June 15, 2026

இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்

 

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு, மரபணு மாற்றமடைந்த புதிய வகை டெங்கு வைரஸ் ஒன்றே காரணம் என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இந்த நோய் வேகமாகப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது, கடந்த காலங்களில் நாட்டில் பரவிய வைரஸ் வகைகளுடன் ஒப்பிடுகையில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் இதற்கு முன்னர் இலங்கை மக்களிடையே பரவலாகக் காணப்படவில்லை.

இலங்கையர்களில் பெரும்பாலானோருக்கு இந்த புதிய வகை வைரஸுக்கு (Variant) எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உடம்பில் இல்லை என்பதால், மிக அதிகளவிலான மக்கள் இந்தத் தடவை டெங்கு நோய்த்தாக்கத்திற்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்து (Vulnerable) காணப்படுகின்றது.

இதனால் நாடு முழுவதும் இந்நோய் மிக வேகமாகப் பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கக்கூடும் என்பதை எதிர்பார்த்து, அதற்கு தேவையான சுகாதார ஏற்பாடுகளை அமைச்சு ஏற்கனவே மேற்கொண்டிருந்தது.

இருப்பினும், இம்முறை பரவும் வைரஸ் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து, சுகாதார அறிவுறுத்தல்களைக் கடுமையான முறையில் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment