Thursday, August 20, 2026

விசா விண்ணப்பங்கள் குறித்து அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

 

Uploading: 371712 of 557544 bytes uploaded.
குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Wednesday, August 19, 2026

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்!

 

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம், இவ்வாறான மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்க முன்மொழியப்பட்டிருந்தது.

இதற்காக நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 5,530 விசேட தேவையுடைய மாணவர்கள் இதற்கான தகைமைகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய, தகைமை பெற்ற 5,530 மாணவர்களுக்கும் உரிய மாதாந்தக் கொடுப்பனவைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Tuesday, August 18, 2026

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!

 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத தெரிவித்துள்ளார்.

நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்காற்று விதிகளை மீறி, பொது முகாமையாளர் பல தீவிரமான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வேதனத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அவர், விடுமுறைக் காலத்தில் அதிகாரசபையின் எந்தவொரு அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தலைவரின் முன்அனுமதி இன்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது முகாமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத உறுதிபடத் தெரிவித்துதள்ளார்.

திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு

 


திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக அகற்றப்பட்ட, கல் உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழாம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான சாதனைப் புத்தக அங்கீகாரம் குறித்து அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என மருத்துவத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக பிரேசிலில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் தொடர்பான பதிவுகள் குறிப்பிடப்பட்டாலும், திருகோணமலை மருத்துவமனையில் அகற்றப்பட்ட கல்லை உலக சாதனையாக உறுதிப்படுத்துவதற்கு உரிய சர்வதேச பதிவுகள் மற்றும் மருத்துவ ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருகோணமலை மருத்துவமனையில் 52 வயதான ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து 3.1 கிலோகிராம் நிறையுடைய பாரிய கல் கடந்த வெள்ளிக் கிழமை வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 21 சென்றிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் நிறையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

பரிசோதனைகளின் அடிப்படையில் நோயாளிக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: உணவக உரிமையாளர் படுகாயம்!

 

அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உணவகமொன்றின் உரிமையாளர் எனவும் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !

 

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் சமித்புர சது என்றழைக்கப்படும் திமுது சதுரங்க இன்று அதிகாலை ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப் . யூ. வூட்லர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகள் சமித்புர சதுவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், கைக்குண்டுகளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஓமானில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவரை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!

 

கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊழியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காட்டு யானை ஒன்று விருந்தக வளாகத்திற்குள் அமைதியாக நடந்து வரும் காட்சிகளை ஊழியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

எவ்வித பதற்றத்தையும் ஏற்படுத்தாமலும், குறித்த விருந்தகத்தின் தளபாடங்கள் மற்றும் பிற பொருட்களைச் சேதப்படுத்தாமலும் அந்த யானை மிக அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்றுள்ளது.

அத்துடன், ஊழியர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அந்த யானை தானாகவே விருந்தக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளது.

விருந்தகம் ஒன்றுக்குள் காட்டு யானை உலா வந்த இந்த அபூர்வ நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!

 

இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் (CAIA) ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சிப் பேரணியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் வசதியாகத் தங்களது சொந்த வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டு, அன்றாடத் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமையையும், நாட்டிற்குள் எந்தவொரு வாகனத்தையும் கொண்டுவர முடியாத நிலைமை காணப்பட்டமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

எனினும், குறுகிய காலத்திற்குள் இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதுடன், இன்று கட்டுப்பாடுகள் இன்றி எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக தற்காலிகமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என்றும், விரைவில் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மக்களின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தமையினாலேயே, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முறையிலாவது இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.


பிரஜைகள் மகிழ்ச்சியாக வாழவும் சுதந்திரமாகப் பயணிக்கவும் விரிவான சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும், அந்த மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!

 


இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக, அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   


இதன்படி, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளில் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர். 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த அதிகாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், அட்டவணைப்படுத்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நியமனங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, August 3, 2026

பேராதனைப் பல்கலைக்கழக விடுதிக்குள் வெள்ள பெருக்கு: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

 

மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கேகாலையில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

 

கேகாலை - கரடுப்பன சந்தியில் இன்று (03) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் 18 பேர் காயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Saturday, August 1, 2026

கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

 

கெனியோன்  நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் தலா 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது

 

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர்; கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!

 

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சியான வானிலை நீடித்து வருவதால், பொதுமக்களை நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்கனவே கடுமையான  நீர் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது சுமார் 40வீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளது.

எதிர்வரும் எல் நினோ காலநிலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகும் வீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மழைபெய்யும் வரை நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களில் உள்ள  நீரை வீணாக்காமல் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில்,வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து எல் நினோ நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

எல் நினோ என்பது மழை முற்றிலும் பெய்யாது என்பதைக் குறிக்காது. மாறாக மழை வீழ்ச்சி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அத்துடன், வெப்பநிலை உயர்வால் ஆவியாதல் வீதம் அதிகரிக்கும் என்பதால் நீர் முகாமைத்துவம் மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெரும்போகப் பயிர்ச்செய்கையை எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாசன அமைப்புகள் மற்றும் விவசாய மண்டலங்கள் முழுவதும் ஒரே நேரத்தில் பயிர்ச்செய்கையைத் தொடங்குவது கணிசமான அளவு நீரைச் சேமிக்க உதவும் என்ற நோக்கத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வறட்சியான வானிலையைச் சமாளிக்கக் குடிநீர் மற்றும் மின்சார விரையத்தைக் குறைக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.