நெடுந்தீவில் அமைந்துள்ள திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்த திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்படாத இந்தத் தனித்தனி தீவுப் பகுதி மக்களுக்கு நம்பகமான மற்றும் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது, சூரிய சக்தி, காற்றாலை, மின்கலச் சேமிப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலையானதொரு எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஓகஸ்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒட்டுமொத்தத் திட்டத்தினதும் முழுமையான செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் இந்த நிதிப் பங்களிப்பானது, தீவக மக்களின் அன்றாட மின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் அவர்களின் பொருளாதார வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment