மருத்துவ வரலாற்றில் புதியதொரு மைல்கல்லாக, மூளைச்சாவு அடைந்த மனிதர் ஒருவரின் உடலில் பன்றியின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களை ஒரே நேரத்தில் வெற்றிகரமாகப் பொருத்தி சீன விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் குவாங்சி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினர் (Guangxi University Scientists) இந்த அதிநவீன மற்றும் சிக்கலான உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த 53 வயதுடைய நபர் ஒருவருக்கே இத்தகைய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சர்ஜரி (Surgical Procedure) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்கு அந்த மனித உடலில் பொருத்தப்பட்ட பன்றியின் உறுப்புகள் எவ்வித பக்கவிளைவுகளோ அல்லது பிரச்சினைகளோ இன்றி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டதாக விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.
மனித உடல் பொதுவாக ஏனைய விலங்கினங்களின் உறுப்புகளை நிராகரிக்கும் (Organ Rejection) தன்மை கொண்டது. இந்த சவாலை முறியடிப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர்.
உறுப்புகளை மனித உடல் நிராகரிக்காமல் தடுப்பதற்காக, அதற்குக் காரணமான பன்றியின் 3 முக்கிய மரபணுக்கள் (Genes) நீக்கப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக, மனித உடலுக்குப் பொருத்தமான 3 மனித மரபணுக்கள் பன்றியின் உறுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த துல்லியமான மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் மூலமே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி சாத்தியமாகியுள்ளது.
உலகளவில் மனித உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளுக்கான தட்டுப்பாடு மிகத்தீவிரமாக நிலவி வரும் சூழலில், இந்த ஆய்வு எதிர்காலத்தில் உறுப்பு செயலிழப்பினால் பாதிக்கப்படும் பல இலட்சக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு வழிவகுக்கும் என்ற புதிய நம்பிக்கையை மருத்துவ உலகிற்கு ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment