Wednesday, June 3, 2026

இரத்தினபுரி - இங்கிரிய வீதியில் துப்பாக்கிச் சூடு

 

இரத்தினபுரி - இங்கிரிய வீதியின் கிரியெல்ல, மாட்டுவாகல விகாரைக்கு அருகில் நேற்று (02) இரவு 10.45 அளவில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.


இந்த வீதியின் இருபுறமிருந்தும் வந்த இரண்டு சிற்றூந்து நேருக்கு நேர் நிறுத்தப்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு சிற்றூந்து இருந்த நபர், தன்னிடம் இருந்த அனுமதிப்பத்திரம் பெற்ற கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி காவல்துறை அதிகாரிகள் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியபோது, சிற்றூந்தில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் வாகனத்தில் இருந்து தப்பியோடிய இரு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment