Monday, June 1, 2026

எபோலா வைரஸ் அபாயத்தை எதிர்கொள்ள இலங்கை தயார் – பொதுச் சுகாதார நிபுணர் துஷானி தாபரேரா உறுதி!

 

எபோலா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்பக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாகப் பொதுச் சுகாதார விசேட மருத்தவ நிபுணர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சு இதற்கான தயார்நிலைத் திட்டங்களையும் பயிற்சிகளையும் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எபோலா வைரஸ் பரவல் பதிவாகியுள்ள கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் குறித்து சிறப்புப் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவு மூலமாக வானூர்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக நாட்டுக்குள் நுழையும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனடியாகத் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எபோலா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதித்து, அவர்களுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கும், பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (ஐ.டி.எச். - அங்கொடை) முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment