வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாகக் கையகப்படுத்தவில்லை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் சந்தன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான பகுதிகளில் காணப்படும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களே தற்போது அடையாளப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் தொல்லியல் மற்றும் புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டதாகவும், தொல்லியல் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமில்லை என்பதுடன், எஞ்சியுள்ள தொல்லியல் சின்னங்களையாவது எதிர்கால தலைமுறைக்காகப் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால நிர்வாகத்தின் தாக்கத்தினால் சிலர் இன மற்றும் மத முரண்பாடுகளை உருவாக்கும் நோக்கில் தொல்லியல் சின்னங்களை அழிக்க முயற்சிப்பதாகவும், அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment