Thursday, July 16, 2026

பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த தீர்மானம்


நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

கணிதம் போன்ற பாடங்களுக்கு நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதிய ஆட்சேர்ப்பு முறை மூலம் அந்தந்த பாடங்களுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முறையான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆண்டிற்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.

இதற்கான நிதி மற்றும் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 பேர் தோற்றியிருந்தனர். தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதேவேளை அதிபர் சேவை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment