Wednesday, July 1, 2026

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் - பெருமளவான பொருட்கள் சேதம்

 

மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (01) ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அவ்வுணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.


குறித்த உணவகத்தில் திடீரென தீ பரவியதைக் கண்ட அப்பகுதி மக்களும் ஊழியர்களும் உடனடியாக மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தினால் உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. எனினும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment