கொழும்பு - பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்திராத 40 நீண்ட தூரப் பேருந்துகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, மாகாணங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் உட்பட மொத்தம் 67 பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன.
இதில் கடுமையான பழுதுகள் கண்டறியப்பட்ட இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எஞ்சிய 38 பேருந்துகளுக்கு, கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து மோட்டார் வாகனப் போக்குவரத் திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாகனப் புகை பரிசோதனை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, வசதிகளை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரும், மோட்டார் வாகனப் போக்குவரத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தச் சோதனைகளின் நோக்கம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இதற்காக வாகனங்களின் தகுதி, பயணிகள் வசதி, எஞ்சின் செயற்பாடு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்குக் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளதால், பேருந்து உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் வாகனங்களை இயக்கச் செல்வதற்கு முன்பு உரிய தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment