Monday, May 11, 2026

180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!


 

திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுக்கு வரும் வகையில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 



இந்த தீர்மானமானது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கு பாரிய அடியாகும் என்று தேசிய தொழில் முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் புஸ்பகுமார கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த ஆண்டில் மட்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் 3 அல்லது 4 ஆவது சந்தர்ப்பமாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள உள்நாட்டு கைத்தொழில்கள் இந்த மேலதிக சுமையினால் முற்றாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்பதால் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் விளைவாகப் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது குறையும் சந்தர்ப்பத்தில் கைத்தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெருமளவானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வீதிக்கு வரும் அபாயம் உள்ளதோடு பலர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் உருவாகும்.

தேர்தல் மேடைகளில் உரையாற்றிய ஜனாதிபதி தற்போதைய மின்சாரக் கட்டணத்தை 3 ஒரு பங்காக குறைப்பதாக பொய் வாக்குறுதிகளை அளித்தே மக்களின் வாக்குகளை பெற்றார். நாங்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து இவ்வாறான செயற்பாட்டை எதிர்பார்க்கவில்லை. வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக மக்கள் மீது சுமை சுமத்தப்படுகிறது. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஹன்வெல்ல கிரிந்திவெல, பூகொட மற்றும் கடுவலை போன்ற பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இன்னும் உரிய நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. இது குறித்து திறைசேரியிடம் வினவிய போது, திறைசேரியில் பணம் இல்லை என்ற பதிலளிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக கூறப்பட்ட போதிலும் சாதாரண மக்களுக்கு அதன் பயன்கள் சென்றடையவில்லை. எனவே 11 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக கைவிட வேண்டும் கற்றாலை மற்றம் சூரிய சக்தி போன்ற மாற்று எரிசக்தி திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


0 comments:

Post a Comment