நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான முதற்கட்ட உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 20 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான பாகங்களே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. இது இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுக்கப்படும் முதலாவது பாரிய மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டமாகும்.
தேசிய மட்டத்திலான இத்திட்டமானது 40 பில்லியன் ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டு, நிலையான, திறனுள்ள மற்றும் நவீன மின்சாரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கம் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய மின்விநியோகக் கட்டமைப்புத் துணை நிலையங்களுக்கு அருகில் இந்த மின்கல சேமிப்புத் தொகுதிகள் நிறுவப்படவுள்ளன. இதற்கான இணைப்புப் புள்ளிகளாக காலி மற்றும் மாத்தறை துணை மின்நிலையங்கள் செயற்படவுள்ளன.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பகல் வேளையில் சூரிய சக்தி ஊடாக உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேரங்களில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது அதனைப் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தின் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடிவதுடன், தேசிய மின்விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சூரிய சக்தி அமைப்புகள் கிட்டத்தட்ட 9.4 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இந்த மின்கல சேமிப்புத் அமைப்புகளின் அறிமுகத்துடன் அந்தப் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதேவேளை, இந்த திட்டத்திற்குத் தேவையான எஞ்சிய 140 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான பாகங்கள் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு வரவழைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment