Thursday, May 28, 2026

இரத்தப் புற்றுநோய் குறித்து வெளியான அறிவிப்பு

 

இரத்தப் புற்றுநோயானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தெளிவாகக் கண்டறியக்கூடிய காரணங்கள் ஏதுமின்றியே ஏற்படுவதாக தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் குருதியியல் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு இரத்தப் புற்றுநோயானது தற்செயலாகவே ஏற்படுகின்றது எனவும், அதற்கான குறிப்பிட்ட காரணங்களை அறிவியல் சான்றுகள் மூலம் துல்லியமாக சுட்டிக்காட்டுவது மிகவும் கடினம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

இரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆபத்துக் காரணிகளே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவையும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளிடமே செல்வாக்குச் செலுத்துகின்றன.

பென்சீன் (Benzene) மற்றும் ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) போன்ற சில இரசாயனங்களுக்கு நீண்டகாலம் முகம் கொடுத்தல்.

புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் (Obesity).

அயனியாக்கும் கதிர்வீச்சுக்கு (Ionising radiation) ஆளாகுதல் (சில மருத்துவ சிகிச்சைகளின் போது ஏற்படும் கதிர்வீச்சுகள் உட்பட).

இருப்பினும், மருத்துவ சிகிச்சைகள் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு அபாயங்கள் மிகவும் அரிதானவை என்பதுடன், அவை பல வருடங்களுக்குப் பின்னரே வெளிப்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரத்தப் புற்றுநோயானது பொதுவாக பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை என மருத்துவர் புத்திக சோமவர்தன குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 5 சதவீதமான சந்தர்ப்பங்களில் மட்டுமே இது மரபணு அல்லது குடும்பப் பின்னணியுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது.

இது பரம்பரை நோய் அல்லாததால், இரத்தப் புற்றுநோயாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வழக்கமான சோதனைகளை (Routine screening) செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

மருத்துவர் ஒருவர் பிரத்தியேகமாகப் பரிந்துரைத்தால் ஒழிய, இதற்காகப் பொது மக்கள் தங்களின் பணத்தையோ அல்லது நேரத்தையோ வீணடிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எலும்பு மஜ்ஜையில் இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் உடலின் இயல்பான செயல்பாட்டில் ஏற்படும் முறிவு அல்லது தோல்வி காரணமாகவே இரத்தப் புற்றுநோய் உருவாகிறது என்று அவர் விவரித்தார்.

இரத்தப் புற்றுநோய் பாதிப்புகள் பெரும்பாலும் ஒருவரின் வாழ்க்கை முறை அல்லது குடும்ப வரலாற்றோடு தொடர்புடையவை அல்ல என்பதாலும், இவற்றை முன்கூட்டியே கணிப்பதோ அல்லது தடுப்பதோ எளிதானதல்ல என்பதாலும், பொதுமக்கள் இது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment