பற்றிரியா மற்றும் பூஞ்சைக் காளான்களைக் கொல்வதற்காக கடைகளில் விற்கப்படும் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பொதுவான பாதுகாப்பான்கள் (Preservatives), இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று பிரான்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பாதுகாப்பான்கள் அதிக இரத்த அழுத்த அபாயத்தை 29% வரையிலும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை 16% வரையிலும் அதிகரிக்கின்றன என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
உணவுகள் நிறம் மாறுவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சிட்ரிக் அமிலம் (Citric acid) மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid - வைட்டமின் சி) போன்ற "இயற்கையானது" என்று சொல்லப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதுகாப்பான்கள் கூட, அதிக இரத்த அழுத்த அபாயத்தை 22% வரை அதிகரிக்கின்றன என இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
பழங்கள் போன்ற உணவுகளில் இவை இயற்கையாகவே காணப்பட்டாலும், உணவுப் பாதுகாப்பான்களாகப் பயன்படுத்தப்படும்போது இவை "முழுக்க முழுக்க இயற்கையானவை அல்ல" என்று இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளர் மாத்தில்தே துவியர் (Mathilde Touvier) தெரிவித்துள்ளார்.
ஆய்வகங்களில் ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இத்தகைய சேர்க்கைப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான சத்துக்களைப் போன்ற ஆரோக்கியமானவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்சின் 'NutriNet-Santé' அமைப்பினால் 2009 ஆம் ஆண்டு முதல் 15 வயதிற்கு மேற்பட்ட 1,12,000 க்கும் அதிகமான தன்னார்வலர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 58 வகையான உணவுப் பாதுகாப்பான்களின் தாக்கம் குறித்து ஆராயப்பட்டதில், வைட்டமின் சி (Ascorbic acid) உள்ளிட்ட 8 முக்கிய பாதுகாப்பான்கள் நேரடியாக இதய ஆரோக்கியத்தைப் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultraprocessed foods) மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதாரண உணவுகளிலும் இத்தகைய பாதுகாப்பான்கள் பரவலாகக் கலக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர் முடிந்தவரை புதிய (Fresh) மற்றும் பதப்படுத்தப்படாத இயற்கை உணவுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர் என CNN செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment