புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல முக்கிய விடயங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் கையளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்கலச் செப்பேடுகளை' மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வந்தமைக்காக முதலமைச்சர் விஜய் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து சில மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்படுகிறது.
இந்நிலையைத் தவிர்த்து, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்குரிய தெளிவுரையினை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது 58 கடற்றொழிலாளர்கள் இலங்கையில் காவலில் உள்ளதுடன், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, கடற்றொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

0 comments:
Post a Comment