நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கை, தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டதை, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கையை குழுவின் பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்தது. இதற்கு அமைச்சுக்;கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது ஹர்ஷ டி சில்வாவின் "தனிப்பட்ட பார்வைக்காக"அது, அவருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த அறிக்கை, அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கோரப்பட்டதே தவிர, தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்பதால், இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் மக்களின் பிரதிநிதி, அத்துடன் தற்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறேன். இந்த அறிக்கை குழுவினர் கூடி ஆராய்ந்து விவாதிப்பதற்கே கோரப்பட்டது, எனது தனிப்பட்ட பார்வைக்காக அல்ல" என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்த அறிக்கையை புதன்கிழமைக்குள் நாடாளுமன்றத்தின் ஊடாகச் சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு தற்போது உத்தரவிட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன், அதன் கண்டுபிடிப்புகளை உறுப்பினர்கள் ஆய்வு செய்த பின்னர், எதிர்காலக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பொது நிதி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விவகாரங்களில், நிறுவப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகளைத் தவிர்க்க முயல்வது பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகக் கண்காணிப்பை சீர்குலைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
0 comments:
Post a Comment