நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் மற்றும் விலையேற்றம் காரணமாக, பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் தங்களுக்குரிய மாதவிடாய் கால சுகாதார துவாய்களை (Sanitary Pads) கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவர்களின் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் மக்களின் வருமான மட்டத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையிலேயே இத்தகைய தயாரிப்புகளின் விலை மிக அதிகமாகக் காணப்படுவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குறித்த அமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ ,
நாணய மதிப்பு இறக்கங்கள், வரிகள், உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் சுகாதார தயாரிப்புகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதற்கு முன்னர் சுமார் 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பக்கெட் மாதவிடாய் கால சுகாதார துவாய் , தற்போது 260 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன், சில இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தக முத்திரை (Branded) தயாரிப்புகளின் விலைகள் இதைவிடவும் அதிகமாக உள்ளன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய சுமையாகும்.
இதன் காரணமாக, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் சுகாதார துவாய்களை கொள்வனவு செய்ய முடியாத சில கிராமப்புற பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள், தங்களின் மாதவிடாய் காலங்களில் வேலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
இது ஒரு நுகர்வோர் பிரச்சினை மட்டுமல்ல, பரந்த சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகும்.
எனவே, மாதவிடாய் கால சுகாதார செலவுகள் மற்றும் இது தொடர்பான கொள்கை ரீதியான குறைபாடுகள் குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என மருத்துவர் சமல் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சானது யுனிசெப் (UNICEF) போன்ற அமைப்புகளுடனும் கல்வித்துறையுடனும் இணைந்து மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும், பெண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான இந்த தயாரிப்புகள் மீதான வரிவிதிப்புக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை எனத் தகவலறிந்த சுகாதாரத் துறை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment