Wednesday, June 3, 2026

புத்தளம் வான்பரப்பில் அதிகாலையில் தோன்றிய மர்மப் பொருள்: வீதிக்கு வந்த மக்கள்

 

புத்தளத்தில் இன்று அதிகாலை வானில் பிரகாசமான பொருள் ஒன்று தோன்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருளைப் பார்ப்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைப் பார்த்த பலரும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

குறித்த மர்மப் பொருள் பல அடி நீளமுடையதாகக் காணப்பட்டதுடன், ரொக்கெட் அல்லது ஏவுகணை போன்ற ஒரு எரியும் வாலையும் கொண்டிருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

வானூர்தியை விட வேகமாக, சுமார் 300 அடி உயரத்தில் பறந்த இந்த பொருள், தூர வான்பரப்பில் வெறும் கண்களுக்குத் தெரியாதவாறு மறைந்துவிட்டதாக மக்கள் விவரித்துள்ளனர்.

இந்த மர்ம பொருள் குறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், இதற்கான முறையான சான்றுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும், ஆர்தர் சி. கிளார்க் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கருத்துத் தெரிவிக்கையில், இந்த பொருள் ஒரு விண்கல்லாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"எரியும் வாலுடன் காணப்பட்டிருந்தால், அந்தப் பொருள் விண்கல்லாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். விண்கற்கள் ஆண்டின் எந்தவொரு காலத்திலும் இரவு வேளைகளில் தென்படக்கூடியவை. எனவே, இது ஒரு விண்கல்லாக இருக்கலாம்" என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இது குறித்து ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்கு முறையான மற்றும் விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment